இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்
இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.
இந்தி மொழி தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்தி மொழிக்கான நிகழ்ச்சியில் பல விஷயங்களை பேசியிருந்தார். இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியை தேசிய மொழியாக்க யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அவர்களுக்கு நாட்டின் மீது நேசம் இல்லை. நம்முடைய நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியை பேசுவதால், இந்தி தேசிய மொழியாவதற்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். பிரிட்டீஷார் 200 வருடங்கள் கூட முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. ஆங்கில மொழியால் அலுவலக பயன்பாட்டிற்கு எவ்வித பயனும் இருந்திருக்கவில்லை” என கூறியுள்ளார்.
இருப்பினும், தான் ஆங்கில மொழிக்கு எதிரானவனோ அல்லது இந்தி மொழியை திணிப்பவனோ கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

