'ஓட்டுகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்' - பாஜக எம்எல்ஏவின் சர்சை பேச்சு!
மோவ் சட்டமன்றத்தொகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக எம்.எல். ஏவும் , மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் அமைச்சருமான உஷா தாக்கூர், கடந்த புதன்கிழமை (16.4.2025) அன்று பேசிய காணொளி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதில் பேசிய அவர் , “ பாஜக அரசின லாட்லி பெஹ்னா யோஜனா மற்றும் கிசான் சம்மன் நிதி போன்ற பல திட்டங்கள் மூலம் ஒவ்வொரு பயனாளிகளின் கணக்குகளிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருகிறது. ஆனால், அதன்பிறகும்கூட, வாக்குக்களை ரூ.1000 - 500 க்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும். வாக்குகளிக்கும்போது உங்களது நேர்மையை இழக்காதீர்கள்.
பணம், சேலை, கண்ணாடி, மது ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஒட்டம், செம்மறி ஆடு, ஆடு, நாய் மற்றும் பூனையாக பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் எழுதிக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தை விற்பவர்களுக்கு இந்த நிலைதான் ஏற்பட போகிறது.
நீங்கள் வாக்களிப்பது ரகசியமாக இருந்தாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி உரையாடல் நடத்துகிறேன். என்னை நம்புங்கள். “ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்தான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஒவ்வொருவரும் பாஜகவிற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் இவர் பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சை பேச்சை பேசியிருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.