எல்.டி.டி.ஈ முதல் காலிஸ்தான் வரை.. இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட 43 இயக்கங்கள்!

எல்.டி.டி.ஈ முதல் காலிஸ்தான் வரை.. இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட 43 இயக்கங்கள்!
எல்.டி.டி.ஈ முதல் காலிஸ்தான் வரை.. இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட 43 இயக்கங்கள்!

இந்தியாவில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே 43 இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போதல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல், நிதி உதவி அளித்தல், நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுதல், தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுதல், ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருத்தல் என பல்வேறு காரணங்களுக்காக, மத்திய உள் துறை அமைச்சகத்தால், 2020 மார்ச் 1 வரை 43 இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைப் பட்டியலில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த இயங்கங்களும் உள்ளன.

மத்திய உள் துறை அமைச்சகப் புள்ளிவிவரத்தின்படி, காலிஸ்தான் கமாண்டோ படை, சர்வதேச சீக்கியர் இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, உல்ஃபா எனப்படும் ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி, மக்கள் விடுதலைப் படை, எல்டிடிஈ எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், அல்-காய்தா, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி, இந்திய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.

இவற்றில் எல்டிடிஈ, அல்-காய்தா, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-மொகம்மது போன்றவை வெளிநாடுகளில் செயல்படும் இயக்கங்கள் ஆகும். சில அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டு பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. சில அமைப்புகளுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பு, காந்தி படுகொலை, அவசர நிலை, பாபர் மசூதி இடிப்பு என மூன்று காலகட்டங்களில் தடை செய்யப்பட்டு பின்னர் அவை விலக்கிக்கொள்ளப்பட்டன. பஜ்ரங் தள் இயக்கம் மற்றும் வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் மீது 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது விதிக்கப்பட்ட தடை பின்னர் நீக்கப்பட்டது.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2024 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2001-ல், அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு மீதான தடை 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 2027 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்தியாவில் அந்தந்த மாநில அரசுகளும் சில அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளன. அந்த வகையில், தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழக விடுதலை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com