“9 மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு” - சபாஷ்! சரியான போட்டி

“9 மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு” - சபாஷ்! சரியான போட்டி
“9 மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு” - சபாஷ்! சரியான போட்டி

தூங்கும் போட்டியில் கலந்து கொண்டு தினம் ஒன்பது மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு தருவோம் என பெங்களூரு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்னை தூக்கமின்மை. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலிருந்து வேலை செய்பவர்கள் அர்த்த ராத்திரியில் விழித்துக் கொண்டு வேலை செய்தாக வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தக் கலாசாரம் அதிகமாக வளர்ந்துவிட்டது. பகல் முழுவதும் படுத்து கிடந்துவிட்டு, நட்டநடு இராத்திரியில் வேலைக்குப் போகும் பலரை நாம் இன்று பார்க்கிறோம். 

அதேபோல் உயர்படிப்புகளுக்கான பரீட்சைகளுக்குப் படிப்பவர்கள் விடிய விடிய விழித்திருந்து படிக்கிறார்கள். இந்த முறையால் பலர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், பல வியாதிகளுக்கு சரியான உறக்கம் இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மருத்துவர்களும் எட்டு மணிநேரம் கட்டாயமாக எந்தச் சஞ்சலமும் இல்லாமல் உறங்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

தூக்கம் என்றால் சாதாரண கோழித்தூக்கம் இல்லை.  ‘டீப் ஸ்லீப்’. அதாவது பக்கத்தில் பெரிய கலவரமே நடந்தாலும் கண்களை திறந்து பார்க்காமல் தூங்க வேண்டும். ‘தூங்கினால் யாரு சார் வேலை பார்க்குறது? எப்படி சார் பணம் சம்பாதிக்கிறது’ என சிலர் கேட்கலாம். அப்படி தூங்க, யாரும் பணம் தருவதில்லை. தந்தால் தூக்கிவிடுவோம். அதற்கு சரியான ஒரு போட்டியை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பெங்களூருவை மையமாக வைத்து இயங்கி வருகிறது ‘ஸ்டார்ட்அப் வேக்ஃபிட்’ நிறுவனம். இந்த நிறுவனம் ஒன்பது மணிநேரம் இடைவிடாமல் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு தருவதாக ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இது ஒருநாள் அல்ல; 100 நாள்கள் இடைவிடாமல் தூங்க வேண்டும். இந்தப் போட்டிக்காக ஒரு அறையை அவர்களே தருவார்கள். அந்த அறையில் நீங்கள் சரியாக உறங்குகிறீர்களா என கண்காணிக்க ஒரு ஆளை நியமிப்பார்கள். மேலும் நீங்கள் தூங்குவதை போல நடித்தால் அவ்வள்ளவுதான். அதை உங்கள் தலையணையே காட்டிக் கொடுத்துவிடும். ஆக, இந்தப் போட்டிக்கு நீங்கள் தயார் என்றால் உடனே விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள என்ன திறமை இருக்க வேண்டும்? யார் கலந்து கொள்ளலாம்? என்பது குறித்து சில விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, “தூங்குவதில் உங்களுக்கு வெறித்தனமான ஆர்வம் இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்கு வழங்கி உள்ள நேரத்தில் சரியாக தூங்கக் கூடிய திறனை பெற்றிருக்க வேண்டும். படுக்கைக்கு சென்ற 10 முதல் 20 நிமிடத்திற்குள் தூங்கிவிட வேண்டும். இரவில் வரும் எந்த அழைப்பையும் எடுக்காமல் இருக்கும் மன உறுதியை பெற்றிருக்க வேண்டும்” என ‘வேக்ஃபிட்’ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், "நீங்கள் ஒவ்வொரு இரவும் உங்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்க்கலாம், அதற்குப் பதிலாக 9 மணிநேரம் தூங்கலாம் என்று நினைக்கிறீர்களா? அப்போது நாங்கள் தேடும் சிறந்த போட்டியாளராக நீங்களே இருக்க முடியும்" என்று ‘வேக்ஃபிட்’ தன்னுடைய இணையதளத்தில் கூறியுள்ளது. அவ்வாறான விண்ணப்பங்களை நாங்கள் இந்த இன்டர்ன்ஷிப் ( internship) திட்டத்திற்கான அழைப்பு விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. 

ஆக, இந்த அற்புதமான போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய ஒரே தகுதி தூக்கம்தான். நீங்க தூங்க ரெடியா? அப்ப போட்டிக்குப் போங்க. கையோடு ஒரு லட்சத்தை தட்டிக் கொண்டு வாங்க! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com