கையேந்தி நின்ற பிள்ளைகளின் கல்விக் கண்ணை திறந்த காவல் அதிகாரி
உதவி செய்வது என்பது சிலருக்கு இயல்பான பழக்கமாக இருக்கலாம். ஆனால் எந்தவித பலனையும் எதிர்பாராமால், தன்னுடைய உதவியால் அடுத்தவர்கள் முன்னேறி செல்வதை பார்ப்பதற்கு எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் இதயம் வந்து விடாது. அதனாலேயே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவும் மனிதர்கள் போற்றத்தக்கவர்களாக பார்க்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் கதையை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
ராஜஸ்தான் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் தரம்வீர். இவர் அங்கு உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு முறை தரம்வீர், வழக்கமாக பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் நிலையத்திற்கு அருகில் சில குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட தரம்வீர், அந்தக் குழந்தைகளிடம் சென்று பேசியுள்ளார். அவர்களிடம் ஏன் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எங்களைப் படிக்க வைக்க யாரும் இல்லை என்றும் வேறு வழி இல்லாமல் வயிற்று பிழைப்புக்காக பிச்சை எடுக்கிறோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பெற்றோர்களைப் பற்றிக் கேட்ட போது எங்களுக்கு அப்படி யாரும் இல்லை என்றும் அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இதனை முதலில் நம்பாத தரம்வீர் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சோதனை செய்துள்ளார். அப்போதுதான் தெரிய வந்தது அவர்கள் அனைவரும் சமுதாயத்தால் கைவிடபட்ட குழந்தைகள் என்று. ஒரு வேளை சோற்றுக்காக இந்த பிஞ்சுகள் மழையிலும் வெயிலிலும் பிச்சை எடுப்பதை கண்டு வேதனை அடைந்த தரம்வீர் அவர்களின் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவெடுத்தார்.
குழந்தைகளின் வாழ்க்கை இப்படி பிச்சை எடுப்பதிலேயே கழிந்து விட்டால் அவர்களின் எதிர்காலம்..? ஆதலால் அந்த வெளிச்சம் கல்வியாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார். இதற்காக அவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் பாடம் எடுப்பதற்காக இரண்டு பெண் காவலர்கள் மற்றும் சில தன்னார்வலர்களை நியமித்து அவர்களுக்கு கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆரம்பத்தில் குழந்தைகளை அழைத்து வர பல சிரமங்களை சந்தித்தார் தரம்வீர். குழந்தைகளிடமும் பெரிதாக ஆர்வமும் இல்லை. இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி பள்ளி ஒன்றை ஆரம்பித்து குழந்தைகளின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, கல்வி சார்ந்த உபகரணங்கள், பள்ளிக்கு அழைத்து வர வாகனம் என அனைத்தையும் இலவசமாக வழங்க முடிவெடுத்தார். உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காகவே குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். இவரின் இந்த முயற்சியை கண்ட சில நல்ல உள்ளங்கள், தங்களால் இயன்ற உதவிகளையும் செய்ய முன் வந்தனர்.
இது மட்டுமல்லாமல் உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து பல குடும்பங்கள் தொழில் செய்ய ராஜஸ்தான் வருகை தந்தனர். அதில் சில குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து குப்பை எடுக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த தரம்வீர், அவர்களின் பெற்றோர்களிடம் பேசினார். ஆனால் பெற்றோர்களோ, குழந்தைகள் தொழில் செய்யாமல் எப்படி பிழைக்க முடியும் என தரம்வீர்-ரிடம் மறுகேள்வி எழுப்பினர். அதற்கு தரம் வீரோ, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். பள்ளி முடிந்த பின் அவர்கள் தொழிலுக்கு செல்லட்டும்’ எனக்கூறி அந்தக் குழந்தைகளையும் படிக்க வைத்தார்.
இந்த பணியில் தரம்வீர் சில எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். பள்ளியின் மாத செலவுக்கு மட்டும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் ரூபாய் செலவானது. இவை அனைத்தும் தன்னார்வலர்கள், இணையதள நண்பர்கள் மூலம் தாராம் வீருக்கு சாத்தியமானது. சொற்ப எண்ணிக்கையில் தொடங்கி, 4 வருட விடா முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘அப்னி பள்ளி’ இன்று 450 மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழ்வு அளித்துள்ளது. இதில் 200 மேற்படிப்புக்காக அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாரா வீரின் கடுமையான முயற்சி மற்றும் கல்வித்துறையின் ஒத்துழைப்பு, தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றால் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கனிவான இதயம், இரக்கம் கொண்டதால் இன்று அந்த குழந்தைகளின் வாழ்வே மாறியுள்ளது. ஒவ்வொருவரும் இப்படி இரக்கம் கொண்டால்....யோசிக்க வேண்டிய தருணம்..இது நண்பர்களே.....