தெருநாய்களுக்கு வீடாகும் பழைய டிவி பெட்டிகள் - அசத்தும் அசாம் இளைஞர்!
எதற்கும் பயன்படாத பழைய டிவி பெட்டிகளை தெரு நாய்களுக்கு வீடாக மாற்றி வருகிறார் இளைஞர் ஒருவர்.
இடத்தை அடைத்துக்கொண்டு இருந்த டிவி பெட்டிகள் எல்லாம் தற்போது சுவரில் ஒரு அட்டையைப்போல தொங்கிக்கொண்டு இருக்கின்றன. நாளுக்கு நாள் டிவிக்களின் அளவு மெல்லியதாக மாறி வருகிறது. அடுத்தடுத்த தொழில்நுட்பத்தின் வரவால் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. இதனால் பழைய டிவிக்களுக்கு மவுசு என்பதே இல்லாமல் போய்விட்டது. எக்சேன்ஜ் என்பது கூட இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. பழுதாகும் பழைய டிவிக்கள் எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகளாகவே மாறுகின்றன.
எதற்கும் பயன்படாத பழைய டிவி பெட்டிகளை தெரு நாய்களுக்கு வீடாக மாற்றி வருகிறார் அபிஜித் என்ற இளைஞர். அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியில் வசித்துவரும் 32வயதான இளைஞர் அபிஜித்க்கு நாய்கள் மீது கொள்ளை பிரியம். கவனிப்பின்றி சுற்றித்திரியும் தெரு நாய்களை கவனித்த அபிஜித் அதற்காக வீடுகளை உருவாக்க நினைத்துள்ளார். அதன்படி உருவானதுதான் பழைய டிவி பெட்டிகளின் வீடுகள். பழைய டிவிகளை ஒரு சிறிய குடில்போல அமைத்து இடவசதி ஏற்பாடு செய்துகொடுக்கிறார். குளிருக்கு இதமாக தெருநாய் அந்த இடத்தில் தங்கிக்கொள்ளும்.
இது குறித்து தெரிவித்துள்ள அபிஜித், பொதுவாக செல்லப்பிராணிகள் சொகுசை விரும்பும். ஆனால் தெருநாய்களுக்கு உணவு, தங்குமிடமே கிடைக்காது. அந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண எதாவது செய்ய வேண்டுமென தீர்மானித்தேன். அப்போது உருவானதுதான் இந்த ஐடியா. இந்த இடம் நாய்களுக்கு, குளிருக்கு இதமாக இருக்கும். இது மட்டுமின்றி கடந்த 5 வருடங்களாக குப்பையில் வீசப்படும் பொருட்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயன்படும் பொருட்களை நான் உருவாக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் யாராலும் கண்டுகொள்ளப்படாத அபிஜித்தின் ஐடியா தற்போது பலராலும் பாராட்டப்படுகிறது. அபிஜித்துக்கு உதவியாக பலரும் தற்போது கைகோத்துள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் பழைய பொருட்களை அவர்களே தேடி வந்து அபிஜித்திடம் ஒப்படைக்கின்றனர். நாய்களுக்கான வீடு மட்டுமின்றி, பெண்களுக்கு இரவில் பாதுகாப்பாக டார்ச் லைட், ஆட்டோமேட்டிக் சானிடைசர் என சிலவற்றையும் அபிஜித் உருவாக்கியுள்ளார். குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் அபிஜித்துக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Source: https://bit.ly/3gPBmPv