தமிழக அரசியலை புரட்டிப்போட்ட 2 வடமாநிலத்தவர்கள் மரணங்கள்... உண்மையில் நடந்தது இதுதான்!

தமிழக அரசியலை புரட்டிப்போட்ட 2 வடமாநிலத்தவர்கள் மரணங்கள்... உண்மையில் நடந்தது இதுதான்!
தமிழக அரசியலை புரட்டிப்போட்ட 2 வடமாநிலத்தவர்கள் மரணங்கள்... உண்மையில் நடந்தது இதுதான்!

தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் சமீபத்தில் பீகார் தொழிலாளிகள் இருவர் மரணித்தது, மாநிலத்தையே உலுக்கியுள்ளதென சொல்லலாம். இருவரில் ஒருவர், பவன் யாதவ். இவர் திருப்பூரில் கடந்த மாதம் 19ம் தேதி மரணித்திருந்தார். மற்றொருவர், மோனு குமார். இவர் கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 25ம் தேதி மரணித்திருந்தார். இவர்கள் இருவரின் மரணித்ததற்கும் உள்ளூர்வாசிகள்தான் காரணமென்ற செய்திதான், தமிழ்நாட்டு அரசியலையே அதிர வைத்தது. முதல்வரே நேரடியாக முன்வந்து இவ்விஷயத்தில் தலையிட்டு, வடமாநில தொழிலாளர்களின் நலனை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழக காவல்துறையும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமுள்ள இடங்களில் நேரில் சென்று கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உண்மையில் மேற்குறிப்பிட்ட இரு மரணங்களிலும் என்னதான் நடந்தது? இருவரும் மரணித்ததன் பின்னணிதான் என்ன? இதுபற்றி முக்கியமான, இதுவரை கிடைத்துள்ள அதிகாரபூர்வ சில தகவல்கள் இங்கே.

பவன் யாதவ் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர தாரி என்பவரால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவரும் உயிரிழந்தவரும், திருப்பூரில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்துள்ளனர். இவர்களில் உயிரிழந்த பவன் யாதவ்வின் சகோதரர் நீரஜ் யாதவ், காவல்நிலையத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, “உபேந்திர தாரியின் மனைவிக்கும், என் அண்ணன் பவன் யாதவ்வுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக உபேந்திர தாரி சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார். அது முற்றிய நிலையில், கடந்த 19ம் தேதி இரவில், உபேந்திர யாதவ் ஆத்திரம் கொண்டு என் கண்முன்னேயே என் அண்ணனை அரிவாளால் வெட்டினார். என் அண்ணனை மீட்டு மருத்துவமனை அழைத்துச்சென்றபோதும், வழியிலேயே அண்ணன் இறந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார். இதை அப்படியே திருப்பூர் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர்-ஆக பதிந்துள்ளனர். அந்த எஃப்.ஐ.ஆர், இதோ:

ஆங்கில ஊடகமொன்றுக்கு இதுபற்றி நீரஜ் யாதவ் அளித்தபேட்டியில் அவரேவும் “என் சகோதரர் கொலைக்கும், தமிழக – பீகாரிய மக்களுக்கிடையேயான மோதலுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவை அனைத்தும் தவறான தகவல்கள்தாம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவரான மோனு குமார் என்பவரது மரணம், கொலையல்ல தற்கொலை என கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். மோனு குப்தா, தன் வீட்டில் மின்விசிறியில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அதைக்கண்ட அண்டைவீட்டார் முதலில் அவரை காப்பாற்ற கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, பின் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி காவல்துறை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை இதோ:

இதன்படி காவல்துறை மிக தெளிவாக, தாங்கள் மோனுவின் உடலை அருகிலிருந்தவர்கள் முன்னிலையிலும் வீட்டு உரிமையாளர் முன்னிலையிலும்தான் திறந்தோம் என தெரிவித்துள்ளது. மோனுவின் தற்கொலைக்கான காரணம், பணிச்சுமையே என்றும் கூறப்பட்டுள்ளது. மோனுவின் சகோதரான சோனு மற்றும் துளசி தாஸூம் இதை உறுதிசெய்துள்ளார்கள். அந்த வீடியோ காட்சி:

எதிர்பாரா விதமாக நடந்த இந்த இரண்டு மரணமும், இந்தி ஊடகங்களில் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதே பிரச்னைகளுக்கான தொடக்கப்புள்ளி என்கின்றனர் அதிகாரிகள். அதுவே அடுத்தடுத்த நிலைகளில் சில அரசியல் கட்சி தலைவர்களாலும் தவறாக பரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதை மனதில் கொண்டே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தனது அறிக்கையில் “ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com