28 லட்சம் வாடிக்கையாளர்கள்; 2 கோடி லட்சம் டெபாசிட்ஸ் - யெஸ் பேங்க் வீழ்ந்த கதை

28 லட்சம் வாடிக்கையாளர்கள்; 2 கோடி லட்சம் டெபாசிட்ஸ் - யெஸ் பேங்க் வீழ்ந்த கதை
28 லட்சம் வாடிக்கையாளர்கள்; 2 கோடி லட்சம்  டெபாசிட்ஸ் - யெஸ் பேங்க் வீழ்ந்த கதை

நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு யெஸ் பேங்கின் நிலை தள்ளப்பட்டது. யெஸ் வங்கி வளர்ந்ததும் வாராக்கடன் அதிகரித்ததும் எப்படி? 


2004ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியபோது தனியார் வங்கிகளில் ஒன்றாக தொடங்கியதுதான் யெஸ் வங்கி. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் போல ராணா கபூர் மற்றும் அசோக் கபூர் ஆகிய இரண்டு தொழில் முனைவோர்களால் யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த வங்கி தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யெஸ் வங்கி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே பொதுப்பங்கு வெளியீடு மூலமாக 300 கோடி ரூபாய் நிதி திரட்டும் அளவிற்கு அந்த வங்கி வளர்ந்தது. பொதுப்பங்கு வெளியீட்டின் போது அவ்வங்கி பங்கு ஒன்றின் விலை 45 ரூபாய். இது 2018ஆம் ஆண்டில் உச்ச விலையாக ஒரு பங்கின் விலை 404 ரூபாய்க்கு விற்பனையானது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு 13 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்ததால் யெஸ் வங்கியின் பங்கு விலை உச்சபட்ச விலையைத் தொட்டது.

யெஸ் வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரத்து 122 கிளைகளும், ஆயிரத்து 337 ஏடிஎம்களும் உள்ளன. யெஸ் வங்கியில் 28 லட்சத்து 60 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த வங்கியில் 2 புள்ளி 9 லட்சம் கோடி மதிப்பில் வாடிக்கையாளர்கள் டெபாசிட்களைச் செய்துள்ளனர். யெஸ் வங்கியின் சொத்து மதிப்பு 3 புள்ளி 47 லட்சம் கோடியாக உள்ள நிலையில், சுமார் 2புள்ளி 25 லட்சம் கோடி அளவிற்கு கடன்களை வழங்கியுள்ளது. தற்போது இந்த வங்கியின் வாராக்கடன் அளவு 17 ஆயிரத்து 134 கோடி ரூபாயாக ‌உ‌ள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இவ்வளவு வேகமாக வளர்ச்சி கண்ட இந்த வங்கியின் பங்கு விலை இன்று 40 ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது. இதற்கு வங்கியைத் தொடங்கிய ராணா கபூரை ரிசர்வ் வங்கி பதவி விலகக் கூறியதுதான் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கு விதிகளை சரியாகப் பின்பற்றாத போக்கு, வங்கி நிர்வாகத்தில் குறைபாடு மற்றும் வங்கிச் சொத்துக்களை சரிவர நிர்வகிக்காதது போன்ற காரணங்களால் வாராக் கடன் அதிகரித்ததே காரண‌ம் என ரிசர்வ் வங்கி கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், ராணா கபூர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அடுத்து வந்தவர்கள் மீது வைக்காததால்தான் பங்கின் விலை சரியத் தொடங்கியதாக முதலீட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர, கடந்த ஆண்டில் யெஸ் வங்கியின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பங்கு தரகு நிறுவனங்கள் எதிர்மறை கருத்துகளை வெளியிட்டது. அந்த வங்கி கடன் அளித்த விவரங்களைக் குறைத்து காட்டியதாக வெளியான தகவல்களும் பங்குகளின் விலை சரியக்‌ காரணமாகின.

அனைத்திற்கும் மேலாக யெஸ் வங்கியில் தனக்கு இந்தப் பங்குகள் அனைத்தையும் விற்க ராணா கபூர் எடுத்த முடிவு முதலீட்டாளர்களுக்கு அவ்வங்கி மீதிருந்த ‌நம்பிக்கை தளர காரணமாகியது. யெஸ் பங்குகளை வைத்திருந்த எஸ்பிஐ, கோட்டக், பிராங்க்ளின் டெம்பில்டன் உள்ளிட்ட மியூச்சுவல் ஃபண்ட்களும் பங்குகளை விற்று வெளியேறின. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டிலேயே 265க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் யெஸ் வங்கியிலிருந்து முதலீடுகளை வெளியேற்றின. இதன் காரணமாக பங்குச் சந்தைகளில் யெஸ் வங்கியின் பங்குகள் விலை 36 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளன.

யெஸ் வங்கியை தோற்றுவித்த ராணா கபூரை‌ ரிசர்வ் வங்கி வெளியேறச் சொன்னதுதான் அந்த வங்கி இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது எனக் கூற முடியாது. வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கும் பணி ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால் வங்கிகளின் செயல்பாடுகளை உற்றுநோக்க வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் தற்போது கடன் சுமையில் தத்தளித்து வரும் யெஸ் வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை தற்காலிகமாக கையிலில் எடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற பட்‌ஜெட்டில் கூட டெபாசிட் தாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு டெபாசிட் இன்சூரன்ஸை ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. வங்கிகள் தங்கள் வளர்ச்சியை கவனிக்கும்போது அவற்றை நம்பியுள்ள வாடிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் இதுபோன்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com