இணையதள கல்வி பயிற்சி அளிக்க ஆரம்பித்த 37 வயதான முன்னாள் பள்ளி ஆசிரியர் தற்போது கோடீஸ்வரராக வலம் வருகிறார்.
கேரள மாநிலம் அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் கேரளாவில் பொறியியல் படித்துவிட்டு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் 2011ஆம் ஆண்டு ‘திங்க் & லேர்ன் ’என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன்மூலம் இணையதளத்தில் பயிற்சியளிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இவர் ‘பைஜூ’ஸ்’ என்ற செயலியை அறிமுக செய்தார்.
இந்தச் செயலியின் மூலம் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரையான பாடத் திட்டங்களுக்கு எளிதாக செயல்முறை விளக்கம் ஆகியவற்றை தர ஆரம்பித்தனர். அத்துடன் பல போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாடத் திட்டங்கள் குறித்தும் இந்தத் தளத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் செயலிக்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது 6 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 413 கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ரவீந்திரன் 21 சதவிகிதம் உரிமையை வைத்துள்ளார். இதன்மூலம் அவர் இந்தியாவில் வலம் வரும் கோடீஸ்வர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக பைஜூ’ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.