கேரளாவில் இன்று முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, காங்கிரஸ் கூட்டணி விடுத்த முழு அடைப்புப் போராட்டம் இன்று நடந்துவருகிறது.
பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகக் கூறி, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பம்ப்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் வழியாக செல்லும் பேருந்துகள் குமுளி, கம்பம்மெட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.