முதல்வர் ஸ்டாலின் To பிரதமர் மோடி.. திருவள்ளுவர் தின வாழ்த்து.. காவி உடை படத்தால் மீண்டும் சர்ச்சை!

திருவள்ளுவர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம்புதிய தலைமுறை

பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.

காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள். விவேகம் நிறைந்த கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவர், மரபு மற்றும் மனித வாழ்வில் தெய்வீகத்தை தூண்டுவதோடு, பல யுகங்களுக்கு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் தூண்டுகிறார்.

திருவள்ளுவர் அவர்கள் எழுதிய திருக்குறள் உலக நலனுக்கானது. இன்றைய பாரதத்தின் கலாச்சார ஞானத்தின் சான்றாகவும் இது கருதப்படுகிறது. திருக்குறள் நமக்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதுடன் திருவள்ளுவரின் காவி படத்தை இணைத்திருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது.

பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி, குறள் வழியே நம் நெறி” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com