காவி உடை திருவள்ளுவர் படத்தை தவறுதலாக பதிவிட்டதால் நீக்கம் : வெங்கையா நாயுடு
திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம் செய்யப்பட்டதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பகிர்ந்தார். மேலும், தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
ஆங்கிலத்தில் போட்ட பதிவிற்கு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும், தமிழில் இட்ட பதிவில் வெள்ளை நிற உடை அணிந்து இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையும் வெங்கையா நாயுடு பகிர்ந்திருந்தார்.
ஆனால், எதிர்ப்பு கிளம்பவே சில மணிநேரத்திற்குப் பிறகு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார். கோரிக்கையை ஏற்று காவிநிற உடை அணிந்த வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடுவிற்கு நன்றி என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காவி உடை அணிந்த வள்ளுவர் படம் நீக்கப்பட்டது குறித்து வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம் செய்யப்பட்டதாக துணை குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.