திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் 6 நாட்களுக்கு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் “ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறக்கூடிய மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்கப்பட்டது. இதில் 30 முதல் 35 சதவீதம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக வைக்க வேண்டும் எனவும் 22 சதவீதம் பக்தர்கள் தரிசனமே வேண்டாம் தேவஸ்தானம் முன்பு அறிவித்தது நல்ல முடிவு எனவும் மீதமுள்ள பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் என கூறினார்
மேலும் பேசிய அவர் “பலரின் கோரிக்கையினை ஏற்று இந்த ஆறு நாட்களுக்கு எத்தனை மணி நேரம் தரிசனத்திற்கு கால அவகாசம் உள்ளதோ அதற்கேற்ப அனைத்து பக்தர்களையும் வைகுண்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆறு நாட்களுக்கு ஏற்கனவே விஐபி தரிசனம், அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தரிசனம், 300 ரூபாய் தரிசனம், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறும் போது நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என அவர் தெரிவித்தார்.