பாஜகவை வீழ்த்த மூன்றாவது அணி வியூகம் - கேசிஆர், மம்தா முயற்சி கைக்கூடுமா.. கானல் நீராகுமா?

பாஜகவை வீழ்த்த மூன்றாவது அணி வியூகம் - கேசிஆர், மம்தா முயற்சி கைக்கூடுமா.. கானல் நீராகுமா?
பாஜகவை வீழ்த்த மூன்றாவது அணி வியூகம் - கேசிஆர், மம்தா முயற்சி கைக்கூடுமா.. கானல் நீராகுமா?

நெருங்கி வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சலனம் ஏதுமின்றி மாநிலக் கட்சிகள் ஒன்றையொன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தல்கள் உருவாக்கியுள்ள பெரும் அதிர்வலைக்கு மத்தியிலும், இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திவிடுகிறது. தங்களின் சந்திப்பு குறித்து பிராந்தியக் கட்சிகள் வெளிப்படையாக கூறாவிட்டாலும், அடுத்து வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி இது என்பது அனைவரும் அறிந்ததே. மூன்றாவது அணியை சாத்தியப்படுத்த கிழக்கில் இருந்து மம்தா பானர்ஜி முனைகிறார் என்றால், தெற்கில் இருந்து அதனை மும்முரமாக செயல்படுத்தி வருகிறார் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ். அதே நேரத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்புக்கு அறைக்கூவல் விடுத்திருக்கிறார்.



பாஜகவை வீழ்த்துவது நாட்டில் பெரும்பாலான பிராந்திய கட்சிகளின் விருப்பம் என்ற போதிலும், அதற்கான 'அத்தியாவசியத் தேவை' என்பது என்னவோ, மம்தா பானர்ஜிக்கும், சந்திரசேகர ராவுக்கும் தான் அதிகம் இருக்கிறது. பாஜகவால் காலூன்றவே முடியாது என நம்பப்பட்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் சமீபகாலமாக அழுத்தம் திருத்தமாக தடம்பதித்துவிட்டது அக்கட்சி. அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி நாற்காலியில் இருந்த கம்யூனிஸ்ட்டை தூக்கியெறிந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது பாஜக. இனி, ஒரு சிறு அலட்சியம் கூட தனது அரியணையை அசைத்து பார்த்துவிடும் என மம்தா பானர்ஜி அஞ்சும் அளவுக்கு அங்கு பாஜகவின் வளர்ச்சி இருக்கிறது.

அதேபோல, தெலங்கானாவிலும் யாரும் எதிர்பார்திராத வகையில் பாஜக வேரூன்றியிருப்பது முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத் தொகுதியில் தோற்கடித்தது முதல் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது வரை பாஜகவின் அசாத்திய வளர்ச்சியை தெலங்கானாவில் காண முடிகிறது.

இவைதான், மம்தா பானர்ஜியையும், சந்திரசேகர ராவையும் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கச் செய்திருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை மம்தாவும், சந்திரசேகர ராவும் அண்மையில் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதுமட்டுமின்றி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோருடனும் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 



வடக்கில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை வீழ்த்துவது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல என்பது யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின் முடிவிலும் பாஜகவின் வாக்குவங்கி கணிசமாக உயர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறையவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் 31 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 2019 மக்களவைத் தேர்தலில் 38 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம், வேலைவாய்ப்பு இன்மை, ஜாதி - மத ரீதியிலான அரசியல் முன்னெடுப்பு என அனைத்து பிரச்னைகளையும், அதிருப்திகளையும் தாண்டி அந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் அல்ல. மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் இருக்கும் செல்வாக்கையே அந்த தேர்தல் முடிவு பிரதிபலித்தது.

இத்தனை வலிமையாக இருக்கும் பாஜகவை தேசிய அளவில் ஒரே மாற்றாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், காங்கிரஸின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது, அது பாஜகவை வென்றுவிடும் என யாராலும் கூற முடியாது. தொடர் தேர்தல் தோல்விகளும், அதிகரித்து வரும் உட்கட்சிப் பூசல்களுமே அதன் சமீபத்திய அடையாளங்களாக மாறியிருக்கின்றன. நாட்டிலேயே இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸின் வாக்கு வங்கியோ வெறும் 19 சதவீதமாகவே இருக்கிறது. இந்த பலத்தை வைத்துக் கொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொண்டு காங்கிரஸால் வெற்றி பெற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

நியாயமாக பார்த்தால், தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி தான், தனது பலவீனத்தை உணர்ந்து, பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த முயற்சியை காங்கிரஸ் கையில் எடுக்கவில்லை. குறைந்த அளவிலான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு, தனது தலைமையில் மாநிலக் கட்சிகளை ஒன்றுதிரட்டுவது சிரமமான காரியம் என யோசித்தும், இந்த நடவடிக்கையில் இருந்து அக்கட்சி பின்வாங்கி இருக்கலாம். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடிக்கு எதிரான வலுவான முகமாகவும், பிரதமர் வேட்பாளராகவும் மற்ற கட்சிகள் ராகுல் காந்தியை ஏற்குமா என்பதும் கூட காங்கிரஸின் சந்தேகமாக இருந்திருக்கும். அவ்வாறு பிரதமர் வேட்பாளராக இல்லாமல், அந்த அணியில் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெரிய கட்சியான தனக்கு இழுக்கு என்றும் காங்கிரஸ் கருதி இருக்கக்கூடும்.

நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினரின் வாக்குகளை தான் பாஜக பெற்று வருகிறது. அதே சமயத்தில், மீதமுள்ள இரண்டு சதவீத வாக்குகளோ பிராந்தியக் கட்சிகளால் சிதறுண்டு வருகின்றன. இதுதான் பாஜகவின் தொடர் வெற்றிக்கும் காரணமாக உள்ளது. சிதறும் இந்த இரண்டு சதவீத வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டுெனில், தனித்தனியாக இருக்கும் பிராந்தியக் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு கூட்டணியை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எனினும், காங்கிரஸ் இந்த முயற்சியை எடுக்காமல் விட்ட காரணத்தால் தான், தற்போது பிராந்தியக் கட்சிகள் மூன்றாம் அணியை அமைக்க எத்தனித்து வருகின்றன. ஆனால், காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மூன்றாம் அணியை உருவாக்க முயற்சிப்பது தான், அது கைக்கூடுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மற்ற மாநிலக் கட்சிகளை ஒப்பிடும் போது தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற கட்சி காங்கிரஸ் மட்டுமே. மேலும், அக்கட்சிக்கு இருக்கும் 19 சதவீத வாக்கு வங்கியை புறக்கணித்துவிட்டு மூன்றாம் அணியால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. அவ்வாறு காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப்படுமேயானால், அது ஆளும் பாஜகவுக்கே சாதகமான சூழலை உருவாக்கிவிடும்.

 இவற்றையெல்லாம் மீறி, காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாம் அணி அமைந்தாலும், பல மாநிலக் கட்சிகள் ஒன்றையொன்று எப்படி விட்டுக்கொடுத்து செயல்படும் என்பதும் சந்தேகமே. உதாரணமாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் தங்களுக்கு இடையேயான பகைமையை மறந்து எப்படி நட்பு பாராட்டும்? சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் எவ்வாறு இணைந்து செயல்படுவார்கள்? திரிணமூல் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ளுமா என்ன? இவ்வாறு ஏராளமான முரண்கள், பிராந்தியக் கட்சிகள் இடையே நிலவும் போது மூன்றாவது அணி அமையுமா...  அவ்வாறே அமைந்தாலும் அது ஆட்சியை பிடித்து நிலையான அரசாங்கத்தை தருமா என நூற்றுக்கணக்கான கேள்விகளும் மக்கள் மனதில் இருக்கின்றன.  கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கூட மம்தா பான்ர்ஜி மூன்றாம் அணியை அமைக்க முயன்று, கட்சிகளுக்கு மத்தியில் நிலவிய நீயா - நீனா போட்டியின் காரணமாக கடைசியில் அது முடியாமல் போனது.



இந்தியாவை பொறுத்தவரை,   மூன்றாம் அணி அமைக்கும் முயற்சி என்பது புதிதொன்றும் இல்லை. தேர்தல் வரும் போது மூன்றாம் அணி என்ற கோஷத்துடன் பிராந்தியக் கட்சிகள் மேடையில் கைகோத்து நிற்பதும், தேர்தல் முடிவடைந்ததும் அது ஒன்றுமில்லாத கானல் நீராக மாறுவதும் காலம் காலமாக இந்திய மக்கள் கண்டு வரும் காட்சிகள் தான். 1990-களில் காங்கிரஸை வீழ்த்த ஜனதா தளம் தலைமையில் 'தேசிய முன்னணி' என்ற மூன்றாம் அணி உருவானது. ஆந்திராவின் தெலுங்கு தேசம், தமிழகத்தின் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாம் அணி ஆட்சியையும் பிடித்தது. பிரதமராக வி.பி. சிங் பதவியேற்றார். ஆனால், ஓராண்டு கூட மூன்றாம் அணியால் தாக்குப்பிடிக்க முடியாமல் வி.பி. சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது.

நாட்டில் அதன் பிறகு உருவான மூன்றாம் அணிகள் பெரிய அளவிலான அரசியல் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதும், பின்னர் அவை தவிடுப்பொடியாவதும் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இப்போது கட்டமைக்கப்பட்டு வரும் மூன்றாம் அணியாவது வெற்றி பெற்று வரலாற்றில் இடம்பிடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com