கடைக்குள் புகுந்து பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்!
மேற்கு வங்கத்தில் கடையில் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் கடைஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளனர். அக்ஷய் தாஸ் என்பவர் மேற்கு வங்கத்தின் சுடஹட்டா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறந்துள்ளார் அக்ஷய். கடையைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன.
திருடர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர் என்பதை யூகித்த அக்ஷய், வேகமாகச் சென்று பணம் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் உள்ள பணம் அப்படியே இருந்துள்ளது. ஆனால் கடையில் இருந்த ரூ.50ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றையும் திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.