Gold Theft
Gold Theft

நகைக்கடைக்குள் செல்ல 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்! திரைப்படங்களை மிஞ்சும் சம்பவம்!

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது கடையை திறக்க பியுஷ் கார்க் சென்றுள்ளார். ஆனால், கடையை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
Published on

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகைக்கடையில் புகுந்து கொள்ளையடிக்க கொள்ளையர்கள் சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பியுஷ் கார்க் என்பவர் நடத்தி வந்த நகைக்கடையில் தான் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது கடையை திறக்க பியுஷ் கார்க் சென்றுள்ளார். ஆனால், கடையை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள நாவுசாண்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

Gold Theft
Gold Theft

போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் நுழைவதற்காக சுமார் 10 அடி நீளமுள்ள சுரங்கத்தையே பூமிக்கு அடியில் தோண்டியது விசாரணையில் தெரியவந்தது. அதாவது, அந்த நகைக்கடைக்குள் செல்லும் சாக்கடைக் குழாயை சுரங்கம் தோண்ட தேர்வு செய்துள்ளனர். சாக்கடைக்குழாயின் சுவர்கள் மிகவும் பலவீனமாக இருந்துள்ளது. அதனால், அதில் இருந்த செங்கற்களை முதலில் எடுத்துவிட்டு பின்னர் மண்ணை கொள்ளையர்கள் தோண்டியுள்ளனர். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்பாக நகைக்கடைக்குள் சென்று தங்கள் திட்டத்தை அரங்கேற்றி முடித்துள்ளனர்.

Police
Police

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாவுசண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com