குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவந்த 11 பேர் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டநிலையில், அவர்கள் பிராமணர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட்டதாக அம்மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி, கரசேவகர்கள் வந்த சபர்மதி ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த கலவரத்தின்போது, ஏராளமான அப்பாவி மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது, பில்கிஸ் பானோ என்ற 21 வயதான 5 மாத கர்ப்பிணிப் பெண், தனது 3 வயது பெண் குழந்தையுடனும், குடும்பத்துடனும் மாநிலத்தை விட்டு தப்ப முயன்று பனிவெல் கிராமத்திற்கு சென்றடைந்துள்ளார்.
ஆனால் மார்ச் 3-ம் தேதி, 20 முதல் 30 பேர் கொண்ட கலவர கும்பல் ஒன்று, கட்டை, கத்திகளால் பில்கிஸ் பானோ குடும்பத்தை தாக்கியுள்ளனர். அப்போது பில்கிஸ் பானோ மற்றும் அவரது தாயார் உள்பட 4 பெண்கள், அந்த கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மோசமானநிலையில் விடப்பட்டனர். மேலும் பில்கிஸ் பானோவின் 3 வயது மகள் உள்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவரின் உறவினரான பெண் ஒருவர் முதல்நாள் தான் பெண் குழந்தை பெற்றெடுத்தநிலையில், அந்தப் பெண், அவரது குழந்தை உள்பட பலரும் கொல்லப்பட்டனர்.
பின்னாளில் பில்கிஸ் பானோவின் குடும்பத்தினர் 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 11 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் அளிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432, 433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார். இந்த குழு 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு, தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை கடந்த சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. பிரதமர் மோடி செங்கோட்டையில் பெண்களின் வளர்ச்சி குறித்து கூறிக் கொண்டிருந்தநிலையில், பாஜக ஆளும் குஜராத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது சர்ச்சையானது.
மேலும், குற்றவாளிகள் விடுதலை செய்வதற்கான பரிந்துரை குழுவில், சி.கே. ராவோல்ஜி மற்றும் சுமன் சௌகான் என்ற இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தக் குழுவில் இருந்த சி.கே. ராவோல்ஜி என்ற பாஜக எம்.எல்.ஏ., மூத்தப் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்தாவின் மோஜா ஸ்டோரி என்ற இணையதள பத்திரிக்கைக்கு அளித்துள்ளப் பேட்டி மீண்டும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. சிறையில் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல நடத்தை கொண்டவர்கள் என்று பொதுவாக அறியப்படுகிறது. அவர்கள் நல்ல பண்பட்ட மனிதர்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.