“மோடி சமூகமா? அப்படினு ஒன்னு இல்லவே இல்ல” - அம்பலப்படுத்திய ராகுல் காந்தியின் வழக்கறிஞர்

விசாரணை முடிவில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இதன் மீதான ஜாமீன் பெற அவருக்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தது
“மோடி சமூகமா? அப்படினு ஒன்னு இல்லவே இல்ல” - அம்பலப்படுத்திய ராகுல் காந்தியின் வழக்கறிஞர்

அவதூறு வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பரப்புரையின் போது “ ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயரே இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி, “மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக ராகுல் காந்தியின் பேச்சு உள்ளது” எனக் குறிப்பிட்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் அப்போதைய நீதிபதி ஏ.கே.தேவ் வழக்கிலிருந்து மாற்றப்பட்டு ஹரிஷ் வர்மா என்ற நீதிபதி வழக்கில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்த வழக்கின் மீதான ஸ்டே நீக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணை முடிவில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இதன் மீதான ஜாமீன் பெற அவருக்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தது.

தீர்ப்பு வந்த அடுத்த நாளே வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் மக்களவை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில், ‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல்’ என பலரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் எம்.பி பதவி பறிக்கப்பட்டது குறித்தும் அவரது வழக்கறிஞர் கிரித் பன்வாலா பேசியிருக்கிறார். அதில் அவர், “இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் 90% குற்றச்சாட்டுகளும் நரேந்திர மோடிக்கு எதிரானது. தனி நபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிய குறிப்பிட்ட அந்நபருக்கு அனுமதி உண்டு என சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த வழக்கை நரேந்திர மோடி பதியாமல் குஜராத்தில் இருக்கு புர்னேஷ் மோடி என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.

ஒரு வரி பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் தண்டனையா? இது போன்று தொடரப்பட்ட பல வழக்குகளின் நிலையை ஆராய்ந்தேன். அதில் மேல்நிலை நீதிமன்றங்கள் எவையும் இதுப்போன்ற தண்டனையை கொடுத்ததில்லை. மாறாக வாய் வார்த்தையாக குற்றஞ்சாட்டப்பட்டவரை திட்டுவார்கள் அல்லது பெயரளவு தண்டனை அல்லது அபராதமே இருக்கும். ஆனால் ராகுல் காந்தி மீதான இந்த அவதூறு வழக்கில் அப்படி நடக்கவில்லை.

‘எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது’ என ராகுல் காந்தி கூறியதில் மோடி என்பதை அந்த மோடி சமூகத்தினரையே சொல்வதாக உள்ளது என யூகித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் இல்லை. அவர்கள் பொதுவெளியில் வெளிப்பட்டதும் இல்லை. மோத் வானிக், மோத் காஞ்ச்சி உள்ளிட்ட சமூகங்கள்தான் இருக்கின்றன. மோடி சமூகம் என்ற ஒன்று இல்லை. அப்படி ஒரு சமூகமே இல்லையெனும்போது, எப்படி அதன் பிரதிநிதியாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் அதற்கு புகார் கொடுக்க முடியும்?

அடுத்தாக, மோடி என்ற பெயரை கொண்டவர்கள் 13 கோடி பேர் இருக்கிறார்கள். சட்டத்தின் படி அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும் போது இவர்களால் புகாரளிக்கவே முடியாது. இதுபோன்ற வெவ்வேறு விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

புகாரளித்தவர்களின் நிலைப்பாடு படி மோத் வானிக் சமூகத்தைதான் மோடி சமூகம் என நினைக்கிறார்கள். ஆனால் ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி.. திருடர்களெல்லாம் ஏன் மோடி என்ற அடைமொழியை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’ என ராகுல் காந்தி கூறியதில் ‘இந்த திருடர்கள்’ என்பது தவறுதலாக விடுபட்டதால் இதனை கருத்தாக கொண்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்” என வழக்கறிஞர் கிரித் பன்வாலா பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com