“அறிவியலின் பணிக்காக காத்திருக்கிறோம்”: பினராயி விஜயன்
கொரோனா பாதிப்புக்கு இதுவரை அதிசய சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை என்றும் அறிவியல் தீர்வுக்காக காத்திருப்பதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “இதுவரை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அறிவியல் அதன் வேலையைச் செய்யக் காத்திருக்கிறோம். இந்த நுண்ணுயிர் வைரஸ் மதம், தேசம் அல்லது உணவு பழக்க வழக்கங்களில் அடிப்படையில் பாகுபடு காட்டுவதில்லை. இந்த யுத்தத்தில் நாம் மிகப்பெரிய அளவில் போராட வேண்டும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில்தான் கொரோனாவுக்கு முதல் பாதிப்புகள் ஏற்பட்டது. கேரளாவில் இதுவரை 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், 20 கோடி ரூபாய் அளவிற்கு சிறப்பு திட்டங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.