'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி

'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி

''எனது தந்தைக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார்'' என கன்னையா லாலின் மகன் கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக-வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னையாவை ராஜஸ்தானைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி, கவுஸ் முகம்மது ஆகிய இருவர் கடந்த வாரம் பட்டப்பகலில் படுகொலை செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கன்னையா லாலின் மகன் யாஷ் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது "என் தந்தைக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, அரசு தகுந்த பாதுகாப்பை வழங்கியிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார். கொலையாளிகள் இருவரும் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறைய வாய்ப்பில்லை. கொடூரமான குற்றத்தை செய்துவிட்டு, இப்போது சிறையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மக்களின் வரி பணத்தில் உணவு வழங்கப்படக்கூடாது. அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள்; வாழ்வதற்கு தகுதியற்றவர்கள். எனக்கு அரசுப் பணி வழங்கினால், குடும்பப் பாரம் குறையும்" என்று அவர் கூறினார்.

கன்னையா லால் கொலையால் உதய்பூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. நேற்று உதய்பூரில் நூற்றுக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தின் போது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. போராட்டக்காரர்களை கலைத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னையா லாலின் உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பாணியில் மரண தண்டனை நிறைவேற்றும் நோக்கில் இப்படி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இதையும் படிக்கலாம்: 'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com