ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுகளில் ஏற்படும் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ராஜஸ்தானில் இருந்து 350 கி.மீ ஓடிய இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார்.
ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான சுரேஷ் பிச்சார். இவர் கடந்த இரு ஆண்டுகளாக ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றில் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார். இருப்பினும் 2 வருடங்களாக ராணுவ அதிகாரி தவிர்த்த மற்ற பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. தேர்வு தொடர்ந்து தாமதமாவதால் பயிற்சி எடுத்துவரும் சில இளைஞர்கள் உச்சபட்ச வயதை தாண்டும் சூழல் ஏற்பட்டு அவர்கள் தேர்வெழுத முடியாமல் போய் விடுகிறது. இதனால் தேர்வுகளில் ஏற்படும் தாமதத்தை கண்டித்து ஆயிரக் கணக்கான இளைஞர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார் சுரேஷ். ராஜஸ்தான் மாநிலம் சிக்கரில் இருந்து போராட்டம் நடைபெறும் ஜந்தர்மந்தருக்கு கிட்டத்தட்ட 350 கி.மீ ஓடிச் செல்லலாம் என தீர்மானித்தார். கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி 50 மணி நேரம் சீரான வேகத்தில் ஓடினார் சுரேஷ். இளைஞர்களிடம் ராணுவ ஆட்சேர்ப்புக்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், தேர்வுகளில் ஏற்படும் தாமதத்தை கண்டித்தும் ஓடுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக விண்ணப்பதாரர்களுக்கு வயதாகி வருவதால் தேர்வுகளை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.