”ஒலிம்பிக்கில் தோற்றதால் பாலியல் தொந்தரவு?”- மல்யுத்த வீராங்கனை புகாரின் அதிர்ச்சி பின்னணி

”ஒலிம்பிக்கில் தோற்றதால் பாலியல் தொந்தரவு?”- மல்யுத்த வீராங்கனை புகாரின் அதிர்ச்சி பின்னணி
”ஒலிம்பிக்கில் தோற்றதால் பாலியல் தொந்தரவு?”- மல்யுத்த வீராங்கனை புகாரின் அதிர்ச்சி பின்னணி

தேசிய பயிற்சியாளர்களால் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக காமென்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு குரல் கொடுக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட பல வீரர், வீராங்கனைகளும் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “சில பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு வேண்டப்பட்ட சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்துகொள்கின்றனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கும் பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்திருக்கிறார். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடரும். அதுவரை எந்தவொரு தடகள விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க மாட்டோம். பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலகும் வரை போராட்டம் நீடிக்கும்.” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இது குறித்து பேசியுள்ள பிரிஜ்பூஷன் சரண் சிங், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததோடு, “இதனால் வேதனையில் இருக்கிறேன். அழுத்தம் காரணமாகவே போராட்டம் நடக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை அம்பலப்படுத்துவேன். எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன். யார் உதவியுடனும் இந்த இடத்துக்கு வரவில்லை. நான் பேசினால் சுனாமியே வரும்.” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இதனையடுத்து “ஊடகங்களிடம் இதுபற்றி எதுவும் பேச வேண்டாம். இதனால் பிரச்னை பெரிதாகும்.” என பிரிஜ்பூஷண் சரண் சிங்கிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தோல்வியுற்றதால் அவரை குறி வைக்கும் விதமாக மன ரீதியாக துன்புறுத்தியதோடு பிரிஜ்பூஷண் சரண் சிங் கடுமையாக தொந்தரவும் கொடுத்திருக்கிறார். இதனால் வினேஷ் போகத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இது வாழ்க்கை தொடர்புடைய பிரச்னையாக இருக்கிறது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். மல்யுத்த கூட்டமைப்பில் உள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் திறனற்றவர்களாக உள்ளனர். அவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை.” எனக் குறிப்பிட்டு முக்கியமான 3 கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.

அதில்,

1. பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து உடபடியாக குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உத்தரவிடவேண்டும்.

2. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்.

3. மல்யுத்த வீரர்களுடன் கலந்தாலோசித்து மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிய குழு அமைக்கப்பட வேண்டும்.

பிரிஜ்பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. எங்களுடைய உயிருக்கு ஆபத்து நேரும் என்ற பயம் இருக்கிறது. பிரிஜ்பூஷணை நீக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களது அனைவரின் வாழ்வும் கேள்விக்குறியாகிவிடும். எங்கள் போராட்டத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. மேலும் இந்த போராட்டம் அரசுக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று (ஜன.,20) மாலை 5.45-க்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com