தன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..! யார் இவர்..?
தலிபான்களின் அடக்குமுறையால் தன் கனவுகள் சிதைக்கப்பட்டிருந்தாலும், பிறரின் விடியலுக்கான வித்தாய் மாறியுள்ளார் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஃபவ்சியா கூஃபி.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் ஃபவ்சியா. சிறு வயதில் இருந்தே ஃபவ்சியா கூஃபிக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு. ஆனால் இவரது கனவு தலிபான்களின் கட்டுப்பாடுகளால் சிதைந்து போனது. ஆனால் இன்று தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் பெண்ணாக மாறியிருக்கிறார்.
தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் 70 பேர் கொண்ட குழு பங்கேற்றது. இதில் இரண்டே பெண்கள். ஒருவர் ஃபவ்சியா மற்றொருவர் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் லைலா ஜாப்ரி. தலிபான்களுடன் நடந்த பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் மூன்று முறை தலிபான் பிரதிநிதிகளை எதிர்கொண்டு பெண்ணுரிமைக்கான அம்சங்களை எடுத்துரைத்தார் ஃபவ்சியா.
தலிபான்களின் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எதிர்த்து குரல் கொடுக்கும் ஃபவ்சியா, தலிபான்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களது விதிகளுக்கு எதிராக நடந்தவர். தலிபான்களின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். இதனையறிந்தும் அவர் ஒருபோதும் கூட புர்கா அணிந்ததில்லை. ஒருமுறை ஃபவ்சியாவின் கணவரை தலிபான்கள் சிறைப்பிடித்தார்கள். பவ்சியாவைக் கொல்லவும் முயன்றார்கள். ஆனால் அந்த அடக்கு முறைக்கு அவர் அடங்கவில்லை. அவர்களுக்கு எதிராக போராடி தலிபான்களை புதிய வழிக்குத் திருப்பும் சக்தியாக தற்போது உருவெடுத்திருக்கிறார்.
மேலும் இந்த போராட்டம் குறித்து அவர் கூறும்போது, “தற்போது பரிணாம மாற்றம் பெற்றிருக்கும் தலிபான்களின் கொள்கைப்படி, பெண்கள் கல்வி கற்கலாம், வேலைக்குப் போகலாம், ஆனால் மதக்கொள்கைகளை கைவிட்டுவிடக்கூடாது. பிரதமர் பதவியை வகிக்கலாம். ஆனால் அதிபர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது. இந்த அளவுக்கு தலிபான்கள் இறங்கி வந்திருப்பதே ஆப்கானிஸ்தானின் புதிய விடியலுக்கான அறிகுறி” என்று கூறுகிறார். மேலும் இனி தனது இருபெண் குழந்தைகளும் எந்த அச்சமும் இல்லாமல் கல்வி கற்கலாம். தாமும் வெற்றிகரமாக அரசியலில் தீவிரமாக ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கிறார் ஃபவ்சியா.