கொரோனா பீதியால் அமெரிக்காவிலிருந்து வந்த கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மனைவி!
மதுரையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருக்கும் கேரள மாநிலம் புனலூர் அருகே உள்ள வெள்ளிமலை வாழவிளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் அமர்த்திவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு நேற்று தனது வீடு அமைந்துள்ள கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு வந்துள்ளார்.
மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க சொல்லவே, அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டின் வாசலை கூட திறக்காமல் வீட்டுக்குள் இவரை விடாமலும் லக்கேஜ்களுடன் வெளியே பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர். கொரோனா பீதியால் கணவரை வீட்டுக்குள் அனுமதிப்பதில் மனைவிக்கு தயக்கம் இருந்ததாக தெரிகிறது. பல கட்ட முயற்சி, கெஞ்சல்களுக்குப் பிறகும் பாஸ்கரனை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ராஜேஷ் என்பவர் பாஸ்கரனின் மனைவியிடம் கணவரை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு சமரசம் செய்ய முன்வந்துள்ளார். ஆனால் விடாப்பிடியாக இருந்த மனைவி கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதில் உறுதியாக இருந்தார்.
வேறு வழியின்றி பாஸ்கரன், தான் திரும்ப சொந்த ஊரான மதுரைக்கு செல்லவிருப்பதாக கூறி தனது காரை கேட்டு உள்ளார். ஆனால் கணவரின் காரை கூட கொடுக்க மனைவிக்கு மனம் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஸ்கரனின் மனைவியிடம் வாக்குவாதம் செய்து, ‘காரை ஆவது அவரிடம் கொடுத்து அனுப்புங்கள்’ என சத்தம் போட்டுள்ளனர்.
ஆனால் பரிவு காட்டாத மனைவியோ காரை கொடுக்காமலும், வீட்டை திறக்காமலும் மவுனம் சாதித்துள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டின் கேட்டை உடைத்து, மெக்கானிக் உதவியுடன் காரை வெளியே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் தனது காரில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.