வாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யத் தவறுபவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குழு நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பதிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதைச் செய்யத் தவறிய ஒரு வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை காவல்துறை அனுப்பியுள்ளது. யூத் ஃபார் பீஸ் என்ற பெயரிலான குழுவை மாவட்டத்திலுள்ள தேசிய தகவல் மைய அலுவலரிடம் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறினால் முன்னறிவிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
21 வாட்ஸ் அப் குழுக்கள் தவறானத் தகவல்களை பரப்பி சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் கண்டறிந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் குழு நிர்வாகிகள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாகவே அம்மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.