குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து பகல் 11.47 மணி அளவில் MI-17 V5 என்ற ஹெலிகாப்டர் குன்னூருக்கு சென்றபோது காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் 12.20 மணியளவில் விபத்துக்குள்ளானது. வெலிங்டன் ராணுவ பள்ளியில் தரையிறங்குவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் இருந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதில் பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேரும் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க முப்படைகளின் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் ஹெலிகாப்டர் கருப்பு பெட்டியை சேகரித்து அதில் உள்ள விவரங்கள், ஏர் டிராபிக் கன்ட்ரோல் அளிக்கும் தகவல்கள், நேரில் விபத்தை பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு வாரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய குழு இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவருடைய இல்லத்தில் நேரடியாக சந்தித்து ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து விபத்து குறித்து விளக்கமளித்தது. மேலும் விபத்துக்கான காரணம் மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டரின் பாதையில் மேகக்கூட்டங்கள் வந்ததால் தரை இறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னர் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மேகக்கூட்டங்களில் நுழைந்த பிறகு பாதை பிழறி, விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நிபுணர் குழு அறிக்கையில் விளக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com