மேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்கு தடைக்கோரிய மனுக்கள் டிசம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக உரிய பதில் அளிக்க கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனைதொடர்ந்து அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக நீர்வளத்துறை அளித்தது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது, அப்போது கர்நாடக அரசும் மத்திய அரசும் தாக்கல் செய்த அறிக்கைக்கு தமிழக அரசு பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் வழங்கியும் தமிழகம் அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.