கிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கான சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியின், ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.