இந்தியா
லக்கிம்பூர்: குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் கெஞ்சுகிறீர்கள்-நீதிமன்றம் சரமாரி கேள்வி
லக்கிம்பூர்: குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் கெஞ்சுகிறீர்கள்-நீதிமன்றம் சரமாரி கேள்வி
கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா என உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நாளை காலை 11 மணி வரை அவகாசம் தந்திருப்பதாக உத்தரப்பிரதேசம் அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் படுகொலையில் முக்கியமான குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல் இன்று ஆஜராகுங்கள் நாளை ஆஜராகுங்கள் என கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். ஒரு சாதாரணமானவனை நீங்கள் இப்படித்தான் கையாண்டிருப்பீர்களா? லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.