தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.. குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஸ்டான் சுவாமியின் கதை!

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.. குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஸ்டான் சுவாமியின் கதை!
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.. குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஸ்டான் சுவாமியின் கதை!

மும்பை மாநகரின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் 83 வயதான சமூக நல ஆர்வலர் ஸ்டான் சுவாமி. நாட்டிலேயே பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு கீழ் ஆளாகி கைது செய்யப்பட்ட அதிக வயதுடைய சீனியர் சிட்டிசன் இவர்தான். பழங்குடி இன மக்களின் பல்வேறு இடர்களுக்கு தொய்வின்றி குரல் கொடுத்தவர். 

யார் இவர்?

கடந்த 1937இல் ஏப்ரல் 26ஆம் தேதி அன்று அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த திருச்சிராப்பள்ளி பகுதியில் பிறந்தவர். இறையியல் முடித்த கையோடு பிலிப்பைன்ஸில் சமூகவியலில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். அங்கு படித்த போது மாணவர்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளார். அங்கிருந்துதான் போராடும் வழக்கத்தை தொடங்கி உள்ளார். 

தொடர்ந்து மேற்படிப்பை படித்த போது அவருக்கு பிரேசிலை சார்ந்த கத்தோலிக்க குரு Hélder Câmara அறிமுகம் கிடைத்துள்ளது. வறியவர்களுக்காக அவர் போராடி வந்ததை பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார் ஸ்டான் சுவாமி. 

பின்னர் 1975 முதல் 1986 வரை பெங்களூரு கத்தோலிக்க தன்னார்வ நிறுவனத்தின் இயக்குனராக அவர் செயல்பட்டுள்ளார். 

பழங்குடி இன மக்களுக்கான சமூக நல ஆர்வலர்!

மூன்று தசாப்தங்கள் பழங்குடி இன மக்கள் நலன் சார்ந்து குரல் கொடுத்து வந்தவர் ஸ்டான் சுவாமி. திருச்சியில் பிறந்த இவர் ஜார்க்கண்ட் மாநில பழங்குடி இன மக்களுக்காக அயராது களப் பணியாற்றியவர். 

>இந்திய அரசியலமைப்பின் 5 வது அட்டவணை, பிரிவு 244 (1) கீழ் பழங்குடியினர் ஆலோசனைக் குழு செயல்படுத்தப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

>பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996 குறித்து கேட்டது, பழங்குடி இன மக்களின் வசிப்பிடங்களில் உள்ள இயற்கை வள சுரண்டலுக்கு எதிராக கேள்வி எழுப்பியது, வன உரிமை சட்டம் 2006, உச்ச நீதிமன்றத்தின் புரிதல் குறித்து கேள்வி எழுப்பியது, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் 2013 மாதிரியானவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டான் சுவாமி. மாநில மற்றும் மத்திய அரசுகளை நோக்கில் பழங்குடி இன மக்கள் நலனுக்காக போராடியவர்.

கைது முதல் இறுதிவரை!

எல்கார் பரிஷாத் வழக்கில் அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் அவர் தொடர்பில் இருந்ததாக சொல்லி தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதால், அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. பார்கின்சன்ஸ் நோய் மற்றும் நுரையீரல் நோய் தொற்றால் அவர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாட்டிலேயே பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு கீழ் ஆளாகி கைது செய்யப்பட்ட அதிக வயதுடைய சீனியர் சிட்டிசன். 

“எனக்கு நடப்பது எனக்கு மட்டும் நடக்கின்ற தனித்துவமானது அல்ல. நாடு முழுவதும் இந்த நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பகிர்கின்ற அல்லது அரசை நோக்கி கேள்வி எழுப்புகின்ற சமூக ஆர்வலர்களுக்கு நடப்பதுதான். அதில் நானும் ஒருவன். அதற்காக என்ன விலையை வேண்டுமானாலும் நான் கொடுக்க தயார்” என் ஸ்டான் கைதவதற்கு முன்பாக தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து சிறையிலும் சிறைவாசிகளின் அவல நிலை குறித்து குரல் கொடுத்திருந்தார். ‘கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பறவைகளும் குழுவாக சேர்ந்து கானம் பாடும்’ என தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தனது நண்பருக்கு கடிதம் எழுதி இருந்தார் ஸ்டான். 

இப்படியாக தனது இறுதி மூச்சு வரை போராடியே இந்த உலகை விட்டு பிரிந்துள்ளார். அவர் மறைந்தாலும் அவர் விதைத்து சென்றுள்ள போராட்ட  விதை விருட்சமாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com