'சர்கார் வரலைன்னா என்ன... சர்தார் இருக்காங்க!' - கொரோனாவுக்கு எதிரான போரில் சீக்கிய குழு

'சர்கார் வரலைன்னா என்ன... சர்தார் இருக்காங்க!' - கொரோனாவுக்கு எதிரான போரில் சீக்கிய குழு
'சர்கார் வரலைன்னா என்ன... சர்தார் இருக்காங்க!' - கொரோனாவுக்கு எதிரான போரில் சீக்கிய குழு

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வரிசையில் இருந்து சீக்கிய குழுக்கள் உதவி வருகின்றனர். அவர்களின் உதவி பற்றிய தொகுப்பு இது!

கொரோனா 2ம் அலையின் தீவிரத்தால் இந்தியா ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர், மருத்துவமனை படுக்கை போன்ற அடிப்படை அத்தியாவசியங்களைக் கேட்கும் செய்திகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. நிலைமையைக் கையாள முடியாமல் அரசாங்கம் தவித்து வருகிறது. அரசு உதவிகள் கிடைக்கவில்லை என்றாலும், இந்த மோசமான சூழ்நிலைகளில், பல சீக்கிய அமைப்புகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக முன்வந்துள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் முதல் வீட்டுக்கே ஆக்சிஜன் கொண்டு செல்வது வரை உதவுவதற்கு பல வழிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு கொரோனா நோயாளிகளுக்காக அவர்களின் வீடுகளுக்கேச் சென்று உணவு வழங்கி வருகிறது. நகரத்தின் பல குருத்வாராக்களுக்கு வெளியே ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் அவசர தேவைகளுக்காக அமைத்துள்ளனர். உதவும் சீக்கிய அமைப்புகளில் முன்னணியில் இருப்பது கல்சா எய்ட் இந்தியா அமைப்பு. வெளிநாடு வாழ் சீக்கியர்கள் உதவியுடன் இயங்கும் இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு துயரங்களிலும் கைகொடுத்து உதவி இருக்கிறது. இப்போதும் இந்த சமயத்தில் தங்களின் நேசக்கரத்தை நீட்டி வருகின்றன.

ஏப்ரல் 24 முதல், கல்சா எய்ட் அமைப்பு டெல்லியில் இலவச ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகிறது. எனினும் தொடர்ந்து உதவிகள் அதிகமாக கோரப்பட, மக்களுக்கு தொடர்ந்து உதவவும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக நிதிகள் திரட்டிய கல்சா எய்ட் இங்கிலாந்தில் இருந்து மேலும் 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கி உதவி வருகின்றனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்தவர்களை தகனம் செய்யவும் சிரமங்கள் ஏற்பட்டன. தகனம் செய்ய மரக்கட்டைகள் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருக்க, தற்போது அதற்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது.

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளிகளைக் கவனிக்கும் சீக்கியத்!

மற்றொரு அமைப்பான சீக்கியத் (SikhAid) அமைப்பைச் சேர்ந்த 110 பான்-இந்தியா (நாடு முழுவதும்) தன்னார்வலர்கள் மற்றும் புவனேஷ்வர் மற்றும் கட்டாக்கில் 25 பேர், இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்களை அர்பணித்துள்ளனர். இவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்மூலம் ஆதரவற்ற நோயாளிகளை இவர்கள் சிறப்பாக கவனித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியிருக்கும் சீக்கியத் அமைப்பைச் சேர்ந்த ரவுனக் என்பவர், ``பல்ஸ் மீட்டர், மாஸ்க், மற்றும் கேட்கப்படும் எந்தவொரு மருத்துவ உதவிகளையும் நாங்கள் 24x7 நேரமும் வழங்கி இருக்கிறோம். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு நாங்கள் பொருட்களை வழங்குகிறோம். சராசரியாக, எங்களுக்கு தினமும் 400-500 அழைப்புகள் வருகின்றன. அவற்றில் 70-80 சதவீதம் ஆக்ஸிஜன் வேண்டி தொடர்புகொள்கிறார்கள்" என்றுள்ளார்.

ஹேம்குண்ட் ஃபவுண்டேஷன்ஸ்!

டெல்லி பகுதியில் உதவும் மற்றொரு அமைப்பு ஹேம்குண்ட் ஃபவுண்டேஷன்ஸ். இவர்களும் கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை தங்களால் இயன்ற அளவு பூர்த்தி செய்து வருகின்றனர். தேவையை சரிசெய்ய இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகித்த பின்னர், ஹேம்குண்ட் அறக்கட்டளை மற்றொரு புதுமையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது நோயாளிகளை தங்கள் கார்களில் இருந்தவாறே சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியில் வைத்து அவர்களின் கார்களில் இயக்கி மூலம் அதை வேலை செய்ய வைக்கின்றனர்.

இதற்காக இவர்களின் அலுவலகத்துக்கு வெளியே பெரிய கேம்ப் ஒன்றையும் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக ஏராளமான சீக்கிய மதத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இவர்களின் அமைப்பில் இணைந்துள்ளனர். ``தன்னார்வலர்கள் அனைவரும் முதலுதவி அளிப்பவர்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் இங்கே சாப்பிட்டு தூங்குகிறோம். இந்த கொரோனாவின் கொடூரத்தால் இங்குள்ள பலரின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் இன்னும் இங்கே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம். தொடர்ந்து நாங்கள் மக்களுக்கு உதவுவோம். இங்கே இருக்கும் வரை எங்களால் முடிந்ததைச் செய்வோம். நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என ஹேம்குண்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த ஹம்கரூத் சிங் என்பவர் பேசியிருக்கிறார்.

தகவல் உறுதுணை: The Quint

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com