சாமானியர்களுக்கு உதவுமா ஆர்பிஐ அறிவிப்புகள்?:  என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

சாமானியர்களுக்கு உதவுமா ஆர்பிஐ அறிவிப்புகள்?: என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

சாமானியர்களுக்கு உதவுமா ஆர்பிஐ அறிவிப்புகள்?: என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
Published on

இந்தச் சமயத்தில் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட வேண்டுமே என்ற காரணத்திற்காகவே ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் விமர்சித்துள்ளார்.

இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும் போது  கொரோனாவால் ஏற்றுமதி மிகக்கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 2021-22-ஆம்ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும்
கடனுக்கான  ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அவசரத் தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60 சதவீதம் வரை மாநில
அரசுகள் கடன் பெறலாம் எனவும் கூறினார்.

ஏற்கெனவே இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கடன் வாங்கியவர்கள் 3 மாத இடைவெளிக்கு பிறகு இஎம்ஐக்களை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பு நல்விதமாக பார்க்கப்பட்டாலும், அதன் பின்னர் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சம்பாதித்தது. காரணம் இந்த மூன்று மாதங்களுக்கு  நாம்  இஎம்ஐ கட்ட வேண்டாம் என தள்ளிவைத்தால், அதற்கு  வட்டி வசூலிக்கப்படும் என பெரும்பாலான வங்கிகள் அறிவித்தன. இதனால் பெரும்பான்மையான மக்கள் அங்கே இங்கே என பணத்தை புரட்டி இம்எஐ தொகையை செலுத்தியுள்ளனர்.


இந்நிலையில் இன்று ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்த அறிவிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் பேசினோம். அவர் பேசும்போது “ இப்போது எதுவுமே சொல்வதற்கில்லை, ஏனென்றால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வெளியே வரும் போதுதான் உண்மையான சூழ்நிலை தெரிய வரும். உணவு தானியங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவை குடோனில் இருந்து என்ன பயன். அவை மக்களிடம் சென்றடைய வேண்டாமா? 2021-22-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என அறிவித்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.

தனியார் வங்கிகளில் யாரும் கடன் வாங்க முன் வரவில்லை என்றால், அந்தப் பணத்தை வங்கிகள் ரிசர்வ் வங்கிகளில் வைத்து விடும். இதனால் லிக்யூடிட்டி குறைந்துவிடும். அதற்காகத் தான் இந்த ரிவர்ஸ் ரெப்போ ரேட் குறைப்பு ஏற்பாடு.

சாமானியர்களுக்கு இந்த அறிவிப்புகள் எந்த விதத்தில் உதவும்?

சாமானியர்களுக்கு அடிப்படைத் தேவைகள் முறையாக சென்றடையவில்லை. ஆக இந்த அறிவிப்புகள், இந்தச் சமயத்தில் ஏதாவது அறிவிப்புகளை அறிவிக்க வேண்டுமே என்ற காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com