மத்திய பட்ஜெட் வரும் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களும் தங்கள் யோசனைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் மத்திய அமைச்சரவைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது பாஜக அளித்த தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 17 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சூழலில் ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகளை நிதியமைச்சகம் தற்போது தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களும் தங்கள் யோசனைகளை தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக mygov.in என்ற வலைத்தளத்தில் மக்கள் மத்திய பட்ஜெட் குறித்த தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு வரும் 20ம் தேதி வரை அவகாசம் தரப்படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் தயாரிப்பு என்ற மிகப்பெரிய நடைமுறையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என நிதியமைச்சகம் விருப்பம் தெரிவித்ததன் காரணமாக இந்த நடைமுறையை நிதியமைச்சகம் கொண்டு வந்துள்ளாது. மேலும் முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.