பஞ்சாப்: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்

பஞ்சாப்: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்
பஞ்சாப்: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்
பஞ்சாபின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வழங்கி உள்ளனர்.
பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல்களால் முதலமைச்சர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் நேற்று விலகினார். அதன் பின்னர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80 எம்.எல்.ஏ.க்கள் வரை பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்றில், சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மற்றொரு தீர்மானத்தில், பஞ்சாப் மற்றும் காங்கிரஸின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்திய அமரிந்தர் சிங்கிற்கு பாராட்டு் மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கேன் தெரிவித்தார்.
இதனிடையே, முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கர், அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. பஞ்சாபில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், முதலமைச்சர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை தலைமை கையாண்ட விதத்தில் தான் அவமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக விமர்சித்த அமரிந்தர் சிங், அவர் ஒரு முழு பேரழிவு என சாடினார். தேர்தலில் காங்கிரஸின் முகமாக சித்து அறிவிக்கப்பட்டால் அவரை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். மாநிலத்தை ஆளும் எந்தத் தகுதியும் சித்துவிற்கு இல்லை என்று பதவி விலகிய அமரிந்தர் சிங் கடுமையாக விமர்சித்தார். தான் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பதாகவும் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் பேசி முடிவெடு்க்கப் போவதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com