‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு
‘கஜா’ புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனர் மற்றும் கட் அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் வரும் 15ஆம் தேதி சென்னை மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. ‘கஜா’ புயல் காரணமாக வரும் 14 ஆம் தேதி இரவு முதல் தஞ்சை, காரைக்கால், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புயலால் 80 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்தப் புயலால் மேலே குறிப்பிட்டு தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. சென்னையை பொருத்தவரை பெரிய பாதிப்பு இருக்காது என்றும், மழை இயல்பான அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘கஜா’ புயல் கடலூர்-பாம்பன் இடையே 15ஆம் தேதி கரையை கடக்கும் என்ற புதிய தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்யும் மாவட்டங்களின் நிலை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கஜா’ புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து 10 பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன. 3 பேரிடர் மீட்பு குழுக்கள் நாகைக்கும், 2 குழுக்கள் சிதம்பரத்திற்கும் விரைந்துள்ளன. சென்னை, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலுக்கு தலா ஒரு குழு விரைந்துள்ளது.
இதையடுத்து ‘கஜா’ புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனர் மற்றும் கட் அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலையில் இருந்தால் உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.