\
NIA chargesheet says Lal Mandir was the original target before the 2025 Red Fort car blast
Red fort blastReuters

‘Plan A’ கோயில்.. ‘Plan B’ செங்கோட்டை.. குண்டுவெடிப்பில் நடந்த திடீர் Twist.. வெளியான பகீர் தகவல்!

2025இல் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு முன், சந்தினி சவுக்கில் உள்ள லால் மந்திர் கோயில்தான் முதலில் குறிவைக்கப்பட்டதாக NIA குற்றப்பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

2025இல் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட இடம் முதலில் குறிவைக்கப்பட்ட இடம் இல்லை என்றும், அதற்கு முன்பாக சந்தினி சவுக்கில் உள்ள லால் மந்திர் கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் i20 காரில் உமர்-உன்-நபி என்பவர் சென்றதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. மாலை 6.37 மணியளவில் அவர் லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றதாக அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த நேரத்தில் லால் மந்திர் அமைந்துள்ள பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. அதேபோல், அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காரை திட்டமிட்டபடி அங்கு நிறுத்த முடியாமல் உமர் திரும்பியுள்ளார். பின்னர் காரை செங்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, செங்கோட்டையின் 4-ஆவது நுழைவுவாயில் அருகே அவர் காரை நிறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாலை 6.50 மணியளவில் அந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றதற்கும் செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்ததற்கும் இடையே வெறும் 13 நிமிட பயண தூரமே இருந்திருக்கிறது.

Red fort blast
Red fort blastReuters

இந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன. அந்தச் சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.17.7 லட்சம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கார் குண்டுவெடிப்பை நடத்துவதற்காக சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. குண்டை வெடிக்கச் செய்வதற்கான கருவி, உமர் அணிந்திருந்த காலணியில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உமருடன் தொடர்புடையவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இதர பொருட்களிலும் ஒரே வகையான ரசாயனங்கள் இருப்பது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட குழு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

Red fort blast
Red fort blastReuters

இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் பார்க்கும்போது, செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு திடீரென தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், முதலில் லால் மந்திரை குறிவைத்திருந்த நிலையில், அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசல் மற்றும் காவல்துறை பாதுகாப்பு காரணமாக திட்டம் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com