அடுத்த முறை இந்தியா வந்தால் புல்லட் ரயிலில் பயணிக்கலாம்: ஜப்பான் பிரதமர்
அடுத்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் புல்லட் ரயிலில் பயணிக்க முடியும் என நம்புவதாகத் ஜப்பான் பிரதமர் அபே கூறினார்.
அகமதாபாத் - மும்பை இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான், இந்தியா என்ற பெயர்களின் முதல் எழுத்துகள் இணைந்தாலே, இந்தியில் "ஜெய்" என்கிற வெற்றியை குறிக்கும் வார்த்தை பிறக்கிறது. அதன்மூலம், ஜெய் ஜப்பான், ஜெய் இந்தியா என இருநாடுகளின் வெற்றியைக் குறிப்பிடலாம். அடுத்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் புல்லட் ரயிலில் பயணிக்க முடியும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தின் முழுமையான பயன்பாட்டை ஏழைகளும் பெறச் செய்தால், வறுமையை ஒழித்துவிடலாம் என கூறினார். புல்லட் ரயில் திட்டம் நிறைவேறினால் மும்பை அகமதாபாத் இடையில் சிறப்பு பொருளாதார திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை வரை அமைக்கப்படவுள்ள இந்த புல்லட் ரயில் மூலம் பயண நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும். 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த புல்லட் ரயில் நாட்டின் மிக நீளமான 21 கி.மீ தூர குகை வழியாக பயணிக்கவுள்ளது. அதில் 7 கி.மீ தூரம் கடலுக்கு அடியில் அமையவுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில் ஒரு நாளில் 70 முறை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்துக்காக ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கிறது. அந்த கடனை 0.1 சதவீத வட்டியுடன் இந்தியா 50 ஆண்டுகளில் திரும்பி செலுத்த வேண்டும்.