அடுத்தது கேரளாதான் – பாஜக தலைவர்களின் புதிய டார்கெட்
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றியதன் மூலம், கம்யூனிஸ்டுகள் ஆளும் ஒரே மாநிலம் என்ற நிலை கேரளாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற கனவு பாஜகவுக்கு இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தங்களது வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டியது பாஜக.
இந்நிலையில் திரிபுராவில் கிடைத்த வெற்றியை பாஜக கொண்டாடி வருகிறது. அக்கட்சியின் தலைவர்கள் பலர் இதனை பெரிய அளவில் சிலாகித்து பேசி வரும் நிலையில், தங்களது அடுத்த இலக்கு என்ன என்பதையும் கூறத் தவறவில்லை. பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஜி.வி.எல்.நரசிம்மராவ், அடுத்து கேரளாவில் ஆட்சி அமைக்க வேண்டியது மட்டுமே பாக்கி என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவரை அடுத்து, பாஜக மாநில செயலாளர் ஹெச்.ராஜாவும் கூட்டணி ஆட்சியால் ஒட்டிக் கொண்டிருப்பது கேரளா மட்டுமே என தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தனது ட்விட்டரில் , திரிபுரா, நாகாலாந்தில் சிறப்பான வெற்றியை பெற்று விட்டோம். அடுத்து என்ன கேரளாதான் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருப்பதையும், இப்போதே கேரள தேர்தலுக்கு அந்தக் கட்சி தயாராக ஆரம்பித்து விட்டது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.