டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள, விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ட்ரோன் போன்ற பொருள் ஒன்று பறந்ததாக காலை 5.30 மணியளவில் டெல்லி காவல்துறையை பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புகுழு அதிகாரிகள் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
ஆனால், டெல்லி போலீஸ் மற்றும் பிற பாதுகாப்புத்துறையினர் சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறிய டெல்லி காவல்துறை அதிகாரிகள், பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பதாக NDD கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், அதுபோன்ற பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையையும் (ATC) தொடர்பு கொண்டும், அவர்களும் பிரதமரின் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் கண்டறியவில்லை என தெரிவித்துள்ளனர்.