’இறந்தபிறகும் மகள்களை தேடும் அம்மா..’ இணையத்தை உறையவைத்த செய்தி! எதிர்காலத்தில் நமக்கும் இதே நிலையா?
குடும்ப உறவுகள் கடந்து பெற்ற 2 பெண் பிள்ளைகளும் தொடர்பை துண்டித்துவிட்டதால், யாருமற்று உயிரிழந்த மும்பையை சேர்ந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் அடக்கம் செய்துள்ளனர். அவர்குறித்து விவரத்தை மகள்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்க அடிக்கப்பட்ட போஸ்டர் சமூகவலைதளங்களை கலங்கடித்துள்ளது.
நவீன உலகில் உலகமயமாதல் காரணமாக கூட்டுக்குடும்ப அமைப்பு உடைந்து தனித்தனி குடும்பங்களாக மாறி வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு காரணமாக பலர் தங்கள் பெற்றோர்களை தனியே விட்டே வேறு மாநிலத்துக்கும், நாடுகளுக்கும் வேலைக்கு செல்லும் சூழலும் உருவாகியுள்ளது.
இப்படி செல்லும் சிலர் தங்கள் பெற்றோரை தனியே தவிக்கவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். வயதான காலத்தில் குடும்பத்தார் மற்றும் தங்கள் பிள்ளைகளின் உதவியின்றி பெற்றோர் இறக்கும் செய்திகளையும் நாம் கேட்டு வருகிறோம்.
அந்த வகையில் மும்பையில் ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் இணையவாசிகளின் இதயத்தையே அசைத்துப் பார்த்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான மும்பையில் வசித்து வருகிறார். இவரின் கணவர் இறந்த நிலையில், மகள்கள் இருவரும் இவருடன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த சூழலில் வீட்டில் தனியே இருந்த இவர் கடந்த நவம்பர் 13-ம் தேதி உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த அவரின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் லலிதா கிருஷ்ணமூர்த்தியின் குடும்ப உறுப்பினர்களையும், அவரின் மகள்களையும் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த எந்த விவரமும் கிடைக்காத நிலையில், அக்கம் பக்கத்தில் வசித்தவர்களே லலிதா கிருஷ்ணமூர்த்தியின் இறுதி சடங்கை நடத்தியுள்ளனர்.
அதோடு லலிதா கிருஷ்ணமூர்த்தியின் இறப்பை அறிவித்தும், இவரது இரண்டு மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறும் பத்திரிகையில் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு குறித்த செய்தியை பலரும் இணையத்தில் பகிர்ந்து வயதான காலத்தில் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் முதியவர்கள் சந்திக்கும் வலிகளை பேசி வருகின்றனர்.

