இனி, வாரத்துக்கு 4 நாட்கள் வேலை.. இந்தியாவுக்கு சாத்தியமா? மத்திய அரசு விதிகள் சொல்வது என்ன?
இந்தியாவில் நீண்டகாலமாக பல இடங்களில் வாரத்துக்கு 5 நாள் வேலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இது அதிகரிக்கும் வேலை தேடுவோரையும் கவனத்தில் கொள்ளச் செய்கிறது.
வாரத்திற்கு 6 நாட்கள் அல்லது 72 மணி நேரம் குறித்து இந்தியாவில் அடிக்கடி கருத்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கட்டாயம் 72 மணி நேரம் பணி அவசியம் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதற்கு எதிர்வினையும் ஆற்றப்படுகிறது. அதேநேரத்தில் 12 மணி நேர வேலையையே குறைக்க வேண்டும் என்கிற வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீண்டகாலமாக பல இடங்களில் வாரத்துக்கு 5 நாள் வேலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இது அதிகரிக்கும் வேலை தேடுவோரையும் கவனத்தில் கொள்ளச் செய்கிறது. இந்தியாவில் இந்த நிலை என்றால் ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் வாரத்துக்கு 4 நாள் வேலையைச் சோதித்துப் பார்த்து நம்பிக்கை கொண்டுள்ளன. இதனால் விரைவில், இந்தியாவும் இதுபோன்ற 4 நாள் வேலையைச் சாத்தியப்படுத்தலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக, மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் சட்ட விதிகளைக் கொண்டு வந்தது. அதன்படி, தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகியவை நவம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகள், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்கள், நிரந்தர தொழிலாளர்களுக்கு ஏற்றபடி மருத்துவம் மற்றும் விடுமுறை சலுகைகள்,ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி, பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க அரசின் முன் அனுமதியைப் பெறுதல் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளுக்கு மத்தியில் வாரத்திற்கு 4 நாள் வேலை சாத்தியம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த பதிவு, ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி பகிரப்பட்ட அந்தப் பதிவில், "தொழிலாளர் குறியீடுகள் 4 வேலை நாட்களுக்கு மட்டுமே 12 மணிநேர நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன, மீதமுள்ள 3 நாட்கள் ஊதிய விடுமுறை நாட்களாகும்" எனப் பதிவிடப்பட்டிருந்தது. இதன்மூலம், வாராந்திர வேலை நேரம் 48 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் கூடுதல் மணிநேரங்களுக்கு ஊதிய விகிதத்தைவிட இரு மடங்கு ஈடுசெய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. மேலும், 12 மணி நேர வேலை நாளில் இடைவேளைகளும் அடங்கும் என்று அமைச்சகம் விளக்குகிறது. இதையடுத்து, ஊழியர்கள் இந்தப் புதிய விதிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

