சக பயணி மீது நிறவெறித் தாக்குதல்: மும்பையில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை

சக பயணி மீது நிறவெறித் தாக்குதல்: மும்பையில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை

சக பயணி மீது நிறவெறித் தாக்குதல்: மும்பையில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை
Published on

மும்பையில் ஊபர் கேப்பில் பயணம் செய்த பெண்ணை, அவருடன் பயணித்த சக பயணி ஒருவர் தரக்குறைவாக திட்டியதோடு, அவரின் முடியையும் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் ட்விட்டரில் தனது பரிதாபக் குரலை பதிவு செய்துள்ளார்.

மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் உஷ்நோட்டா பால். இவர் இன்று காலையில் வேலை விசயமாக வெளியே செல்வதற்காக ஊபர் வண்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ஏறுவதற்கு முன்னதாகவே அதே வண்டியில் மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார். உஷ்நோட்டா பெல் கேப்பில் ஏறியபோதே அப்பெண் சற்று விரோத போக்கில் அவரை பார்த்துள்ளார். ஆனால் உஷ்நோட்டா அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் பேச்சுவாக்கில் அப்பெண் கேப் டிரைவரிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அப்போது, தான் அதிகக்கட்டணம் கொடுத்து பயணிப்பதாகவும், ஆனால் இப்போது வந்தவர்கள் முதலில் இறங்கிவிட உள்ளதாகவும், தான் கடைசியில் இறங்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார். உடனே உஷ்நோட்டா தலையிட்டு பேச முயன்றிருக்கிறார். ஆனால் அப்போது கடுமையாக திட்ட ஆரம்பித்திருக்கிறார் அப்பெண். எனவே  பேசி பயனில்லை எனத் தெரிந்ததும் அமைதியாக இருக்க ஆரம்பித்துள்ளார் உஷ்நோட்டா. 

ஆனால் விடாமல் புகார் கூறிய அப்பெண் உஷ்நோட்டாவை வம்புக்கு இழுத்திருக்கிறார். உஷ்நோட்டாவின் பக்கத்தில் இருந்த அவரது பையையும் எடுத்து வேறு இடத்தில் வைத்து வம்பு செய்திருக்கிறார் அப்பெண். தொடர்ந்து இனவெறியை தூண்டும் விதமாக உஷ்நோட்டாவின் நிறம் குறித்து அப்பெண் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே அப்பெண்ணை தனது மொபைல் போன் மூலமாக படமெடுக்க முயற்சித்திருக்கிறார் உஷ்நோட்டா. ஆனால் அப்பெண் உஷ்நோட்டாவின் செல்போனை பறித்ததோடு அதனை உடைத்துவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். எனவே உஷ்நோட்டாவால் அப்பெண்ணின் புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து வண்டியை விட்டு இறங்குவதற்கு முன்னதாக அப்பெண் உஷ்நோட்டாவை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். முடியை பிடித்து இழுத்து அடித்ததோடு முகத்தையும் கீறியிருக்கிறார் அப்பெண். பின் வண்டியை விட்டு இறங்கி அங்கிருந்த உர்மி எஸ்டேட்டிருக்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து உஷ்நோட்டா வண்டியில் கண்ணீர் மல்க அழுதிருக்கிறார். பின்னர் இது சம்பந்தமாக எல்பி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார் உஷ்நோட்டா. அதனைத்தொடர்ந்து போலீசாரும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இந்த முழு சம்பவத்திலும் உஷ்நோட்டாவுடன் வண்டியின் டிரைவரும் இருந்துள்ளார். 

இதனிடையே உஷ்நோட்டா புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட பெண்ணின் விவரங்களை ஊபர் நிர்வாகத்திடம் போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை தரமாட்டோம் என ஊபர் மறுத்துவிட்டது. தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து உஷ்நோட்டா ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். இதற்கு ஊபர் சப்போர்ட் உஷ்நோட்டாவிற்கு பதில் கொடுத்துள்ளது. அதில், “நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி. இந்தப் பிரச்னையை சரி செய்வதில் எங்கள் குழு ஈடுபட்டு வருகிறது. மெயில் வழியாக தொடர்பில் இருக்கவும். உங்கள் பொறுமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளது. உஷ்நோட்டா ஊபர் வண்டியை அடிக்கடி பயன்படுத்துபவர். இனிமேல் ஊபர் கேப்பில் பயணிக்க போவதில்லை எனத் தெரிவித்துவிட்டார் உஷ்நோட்டா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com