“இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு நழுவி இருக்கிறது” - கமல்ஹாசன்
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு நழுவி இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ‘இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டது இல்லை. இம்முறை இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்துக்கு 22 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் 14 நாடுகள் தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்தன. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

