ஒரு வழக்கு; பெற்றதோ ரூ.117 கோடி... ஐடி சோதனையில் சிக்கிய வழக்கறிஞர்
சட்ட ஆலோசனை நிறுவனத்தின் 38 அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது
வழக்கு ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக வந்த புகாரை அடுத்து சட்ட ஆலோசனை நிறுவனத்தின் 38 அலுவலகங்களில்
வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத ரொக்கம்
கைப்பற்றப்பட்டது. மேலும் 10 லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டன. டெல்லி ,என்.சிஆர் மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவில் இந்த
சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது.
சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்த குறிப்பிட்ட வழக்கறிஞர், வழக்கு ஒன்றிற்காக தன்னுடைய க்ளைண்ட் ஒருவரிடம் ரூ.117 கோடி
பெற்றதாகவும் அதில் ரூ.21 கோடியை மட்டுமே கணக்கில் காட்டியதாகவும் புகார் வந்துள்ளது. இதனை அடுத்தே வருமான
வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
அதேபோல் மற்றொரு வழக்கிற்காக, பொதுத்துறை நிறுவனத்திற்கு வேலை செய்த ஒரு உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல்
நிறுவனத்திடமிருந்து ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெறப்பட்டுள்ளது. இந்த கணக்கில் காட்டப்படாத பணமெல்லாம் அறக்கட்டளையின் கீழ்
இயங்கும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.