குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலாக உள்ளன. குஜராத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. குஜராத்தில் 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜ.க 99, காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. தற்போது குஜராத் சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 111, காங்கிரஸ் கட்சிக்கு 63 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் 92 ஆகும்.
குஜராத் சட்டசபை தேர்தல், அடுத்து வரும் 5 மாநிலங்களுக்கான முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் குஜராத் மற்றும் இமாச்சல் ஆகிய 2 மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில வாரங்களாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் கட்சி தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றார். எதிர்பாராவிதமாக சமீபத்தில் ஏற்பட்ட மோர்பி பால விபத்தும், இந்த தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக குஜராத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5 ஆம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 10 ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இமாச்சல் மற்றும் குஜராத்தில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.