ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு?
ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நெறிமுறைப்படுத்த திட்டம் வகுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை காலங்களில் சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை தள்ளுபடியை வாரி இரைக்கும். நேரில் சென்று வாங்கும் கடைகளுக்கு போட்டியாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் தள்ளுபடி கொடுக்கத் தவறுவதில்லை. பண்டிகைக்காலம் அல்லாத நாட்களிலேயே தள்ளுபடி தரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பண்டிகை காலங்களுக்காக பெரிய திட்டங்களை வகுத்து வருவது தொடர்ந்து வருகின்றன. மேலும் மெகா தள்ளுபடி விற்பனைக்காக விநியோக மையங்களையும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அமைத்து பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து அமேசான், ஃபிளிப்கார்ட்,பேடிஎம் மால் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தள்ளுபடி மட்டும் இல்லாமல் இலவசங்கள் உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகளுடன் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இதனால் தங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் உள்ளூர் வணிகர்கள், ஆன்-லைன் பொருட்கள் விற்பனையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடிவாளம் போடும் விதமாக மத்திய அரசு திட்டம் வகுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் பொருட்கள் விற்கப்படுவதை நெறிமுறைப்படுத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், உள்ளூர் வணிகர்களின் நலனைக் கருதில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.