கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் இனி ரூ.5000 அபராதம் !
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது நொய்டா நகர நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்தால் 5,000 ரூபாய் அபராதத்தொகை செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,500 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், சாலைகளில் அவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டுமெனவும் கால்நடைகளை உரிய இடங்களில் கட்டிப்போட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் காரணத்தால் கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் அத்துடன் இனி 5000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

