வரலாற்றில் முதன்முறை! டாலருக்கு 80 ரூபாயாக சரிந்த இறக்குமதி பொருட்களின் விலைகள்

வரலாற்றில் முதன்முறை! டாலருக்கு 80 ரூபாயாக சரிந்த இறக்குமதி பொருட்களின் விலைகள்
வரலாற்றில் முதன்முறை!  டாலருக்கு 80 ரூபாயாக சரிந்த இறக்குமதி பொருட்களின் விலைகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் எரிபொருள் உள்ளிட்ட இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என வியாழக்கிழமை வணிகமான நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு விரைவாக குறைய தற்போது வாய்ப்பில்லை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதனால் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் செலவு அதிகமாகும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது வேறு காரணங்களுக்காக பயணம் செய்யும் இந்திய மக்களின் செலவும் அதிகரிக்கும். இவர்கள் வெளிநாடுகளில் செலவு செய்ய டாலர்களை வாங்கும் போது, அதற்கு நிகராக கூடுதல் இந்திய ரூபாயை கூடுதலாக செலவிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போல கார்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் விலை அதிகரிக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் கார்கள் மற்றும் கைபேசிகளை வாங்க கூடுதல் செலவு செய்தாக வேண்டும்.

ஏற்கனவே வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள அமெரிக்கா, வரலாறு காணாத பண வீக்கத்தை கட்டுப்படுத்த விரைவில் வட்டி விகிதத்தை மேலும் ஒரு சதவிகிதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உலகின் பல்வேறு கரன்சிகளுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இருந்தபோதிலும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் வட்டி விகித அதிகரிப்பு அதிக தாக்கம் உள்ளதாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கு டாலர் அதிக அளவில் தேவைப்படுவதே இதற்கு காரணமாகும். இந்தியாவிலே தற்போது இறக்குமதி அதிகமாக உள்ளது என்பதால் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக இறக்குமதி மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிந்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் அதே நேரத்தில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு பலனை அளிக்கும் என கருதப்படுகிறது. இவர்கள் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் கிடைக்கும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால், லாபம் அதிகரிக்கும். அதே சமயத்தில், விலையை குறைத்து தங்களின் வியாபாரத்தை பெருக்கவும் ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பு கிட்டுகிறது. இந்திய சேவை நிறுவனங்கள் ஏற்றுமதியை ஐடி போன்ற துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், நகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

- புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com