சொந்த மாவட்டத்திலே பணி ! 'சிம்பிளாக' வந்த ஆட்சியர்
இடுக்கி மண்ணின் மைந்தரான ஜீவன்பாபு இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஆக பொறுப்பேற்றார். முதன்முறையாக பாரம்பரிய “வேஷ்டி சட்டை” யில் வந்து பொறுப்பேற்றார்.
இடுக்கி மாவட்டத்தின் 38வது ஆட்சியராக முதன்முறையாக இடுக்கி மண்ணின் மைந்தரான ஜீவன்பாபு ஐ.ஏ,எஸ்., பொறுப்பேற்றார். வெகு சாதரணமாக கேரள பாரம்பரிய “வேஷ்டி சட்டை”யில் வந்து ஆட்சியராக பொறுப்பேற்றார். அவரை, அரசுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். சாமானிய மக்களுக்கு உதவும் நிர்வாகமாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் இருக்கும் என அவர் உறுதியளித்தார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியராக இருந்த கோகுல் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றதால் அந்த காலியிடத்தில் புதிய ஆட்சியரை நியமிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் காசர்கோடு மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜீவன்பாபுவை இடுக்கி ஆட்சியராக நியமிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் முதன்முறையாக இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியே மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சியராக பொறுபேற்க இடுக்கி ஆட்சியர் அலுவலகத்திற்கு கேரள பாரம்பரிய “வேஷ்டி சட்டை”யில் வந்து அசத்திய அவரை, மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் மாவட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச்சென்றார். உடன் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொறுப்பு கோப்புகளில் கையெழுத்திட்ட அவர், சாமானியர்களுக்கு உதவும் இடமாக அரசுத்துறைகள் மாறவேண்டும் எனவும் சாமானிய மக்களுக்காக இந்த இடுக்கி மாவட்ட நிர்வாகம் செயல்படும் என உறுதியளித்தார். இடுக்கியை சேர்ந்தவர், இடுக்கி மக்களைப்பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் இடுக்கி ஆட்சியர் மீது இடுக்கி மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த ஜீவன்பாபு கடந்த 2009ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று வருவாய்த்துறையிலும், 2010 ம் ஆண்டு ஐ.பி,எஸ்., தேர்வாகி காவல்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2011ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று காசர்கோடு மாவட்ட உதவி ஆட்சியர், சுங்கத்துறை உதவி ஆணையர், நில அளவை இயக்குனர் என பல்வேறு அரசு பணிகளை வகித்த அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதற்கு முன்பு வரை காசர்கோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்துள்ளார்.