’அவமான சின்னம்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று!

’அவமான சின்னம்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று!
’அவமான சின்னம்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று!

அவமானத்தின் சின்னம் (Wall of Shame) என்று அழைக்கப்பட்ட ‘பெர்லின் சுவர்’ உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்று! 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெற்றி பெற்ற நாடுகள், ஜெர்மனியை ஆளாளுக்குப் பிரித்து பங்குபோட்டன. ரஷ்யாவும் நேசநாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்தும் ஒவ்வொரு பகுதியை பிரித்து, செக் போஸ்ட் அமைத்தனர். அதில் தங்கள் ராணுவத்தினரை நிறுத்தினர். ஜெர்மனி, கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்டது. ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, கிழக்கு ஜெர்மனி ஆனது. தலைநகர் பெர்லின் நகரும் பிரிக்கப்பட்டது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், சுதந்திரம் தேடி மேற்கு ஜெர்மனிக்குத் தப்பினர். ஒரே வருடத்தில் மட்டும் சுமார் 35 லட்சம் பேர், ராணுவ கட்டுப்பாட்டை மீறி, தப்பியதாகச் சொல்கிறார்கள். அவர்களை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியவில்லை. இதனால் அவர்கள் தப்பிச் செல்வதை தடுக்க, ஒரு நள்ளிரவில் திடீரென்று சுவர் ஒன்றை எழுப்பியது, ரஷ்யா. யாரும் எதிர்பார்க்காத வகையில் 156 கி.மீட்டர் தூரத்துக்கு 13 அடி உயரத்தில் எழுப்பப்பட்ட அந்தச் சுவர், பெர்லின் நகரத்தின் வழியே மட்டும் 27 கி.மீட்டருக்குச் சென்றது.

எந்த அறிவிப்பும் இல்லாமல் எழுப்பப்பட்ட இந்த சுவரால், உறவினர்கள் அங்கும் இங்குமென பிரிந்தார்கள். பெற்றோர் ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் என தவித்தார்கள். கணவன் அங்கும் மனைவி இங்குமாகப் பிரிந்து கண்ணீர் வடித்தார்கள். பெருந்தீயாய் ஏக்கங்கள் சுமந்த அந்தச் சுவரை, பெர்லின் சுவர் என்றது ரஷ்யா. அவமானத்தின் சின்னம் என்றது மேற்கு ஜெர்மனி! எல்லை தாண்டும் முயற்சியில் பலர் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். 

இதைப் பனிப்போர் என்கிறார்கள். இந்தப் போரின் இறுதியில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனி, 1989 நவம்பர் 9 ஆம் தேதி, மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல, மக்களை அனுமதிப்பதாக அறிவித்தது. இதையடுத்து ஏக்கங்களோடும் பேரன்போடும்,  சுவரில் ஏறி, மறுபக்கம் நுழைந்தனர் மக்கள். ஆயிரக்கணக்கான மேற்கு ஜெர்மனியினர், இவர்களை மறுபக்கத்தில் இருந்து வரவேற்றனர். அங்கு இறுகியது நெஞ்சம், பெருகியது அன்பு! அளவிட முடியாத பாசத்தில் ஆனந்த கண்ணீர்விட்டவர்கள் பலர்.

இதையடுத்து அந்தச் சுவர் மக்களால் இடித்துத் தள்ளப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த ஆயுதங்களால் அதை இடித்துத் தள்ளினர். அதில் விழுந்த சில துண்டுகளை, நினைவாக தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்றனர். இன்றும் பலர் அந்த சுவர் துண்டுகளை தங்கள் வீடுகளில் நினைவுச் சின்னமாக வைத்திருக்கின்றனர்.

ஓர் அவமான சின்னம் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாளாக இந்த நாளைக் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், வெளியாக இருக்கிறது அயோத்தி தீர்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com